Home Featured நாடு டான்ஸ்ரீ பாசமாணிக்கம் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும்!

டான்ஸ்ரீ பாசமாணிக்கம் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும்!

852
0
SHARE
Ad

Pasamanickamமூவார் – இன்று அதிகாலை 12.45 மணியளவில் காலமான மஇகாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான டான்ஸ்ரீ டத்தோ ஜி.பாசமாணிக்கம் அவர்களின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை செவ்வாய்க்கிழமை மே 3ஆம் தேதி காலை 11.30 மணி முதல் அன்னாரின் இறுதிச் சடங்குகள் கீழ்க்காணும் முகவரியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்:

எண் 38, ஜாலான் இப்ராகிம்,

#TamilSchoolmychoice

84000 மூவார், ஜோகூர்

(No.38, Jalan Ibrahim, 84000 Muar, Johor)

94 வயதான பாசமாணிக்கம், இன்றைய மஇகா தலைவர்களிலேயே மூத்தவராகக் கருதப்பட்டவராவார்.

மஇகாவின் சாதாரண உறுப்பினர்களில் ஒருவராக அரசியலில் நுழைந்தவர், காலப் போக்கில் தனது உழைப்பினாலும், அரசியல் திறனாலும், பல்வேறு பதவிகளை வகிக்கும் அளவுக்கு உயர்ந்தார்.

டான்ஸ்ரீ பாசம் என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட அவர், மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர்கள் துன் வீ.தி.சம்பந்தன், டான்ஸ்ரீ வி.மாணிக்கவாசகம், டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு ஆகியோரின் தலைமையின் கீழ் பணியாற்றியவர்.

தனது அரசியல் போராட்டங்களிலும், தான் தேசியத் தலைவராக உயர்வதற்கும், தனக்கு உறுதுணையாக, இருந்தவர், தோள்கொடுத்தவர் டான்ஸ்ரீ பாசம் என சாமிவேலு பல தருணங்களில் பகிரங்கமாகவே அறிவித்திருக்கின்றார்.

Pasamanickam-Asojhan-கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி மூவார் முத்து மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற, சித்திரைப் புத்தாண்டு நிகழ்ச்சியில், பாசமாணிக்கம், ஜோகூர் மாநில சட்டமன்ற உறுப்பினர் அசோகனுடன் கலந்து கொண்டு உணவருந்திய காட்சி

தனது கடைசிக் காலம் வரையிலும் கூட மஇகா மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர் பாசமாணிக்கம்.

தன்னை விட வயது குறைந்தவர்களிடத்திலும் பண்போடும், பணிவோடும் பேசிப் பழகிய அவரது தன்மை – அழகான, சரளமான மொழி வளத்தோடு மேடையில் உரையாற்றும் ஆற்றல் – வயதான காலகட்டத்திலும், நேர்த்தியாக உடை உடுத்தி, கம்பீரமாக பொது நிகழ்ச்சிகளில் உலா வந்தது – ஆகியவை அவரது தனித்துவ சிறப்புக்களாக எப்போதுமே பார்க்கப்பட்டது.

அவரது புதல்வர் டாக்டர் பி.கண்ணன் நாட்டில் புகழ்பெற்ற, முன்னணி இதய நோய் நிபுணர்களில் ஒருவராவார். அவருக்கு சுந்தரி என்ற புதல்வி ஒருவரும் இருக்கின்றார்.

மஇகா கிளைத் தலைவர், மூவார் தொகுதிக் காங்கிரஸ் தலைவர், மஇகா ஜோகூர் மாநிலத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், ஜோகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர், மஇகாவின் தேசியப் பொருளாளர், தேசிய உதவித் தலைவர், மஇகாவின் பொருளாதார அமைப்பான மைக்கா ஹோல்டிங்சின் தலைவர், என பல்வேறு பதவிகளை வகித்திருக்கின்றார்.