ஜகார்த்தா – இந்தோனிசியாவில் பள்ளி மாணவி ஒருவரை, 14 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி, கொலை செய்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பதில் அரசாங்கம் மெத்தனம் காட்டி வருவதாக சில தரப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் படி இன்று புதன்கிழமை இந்தோனிசிய அதிபர் ஜோகா விடோடோ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
“அவளின் சோகமான முடிவை எண்ணி நாங்கள் வருந்துகின்றோம். குற்றவாளிகளைக் கைது செய்து, எவ்வளவு முடியுமோ அவ்வளவு கடுமையான தண்டனை வழங்குங்கள்” என்று விடோடோ இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 2-ம் தேதி, சுமத்ராவின் மேற்குப் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது மாணவியை, மது அருந்திவிட்டு போதையில் இருந்த கும்பல் ஒன்று காட்டிற்குள் இழுத்துச் சென்று கற்பழித்துக் கொலை செய்துள்ளது.
இரண்டு நாட்களுக்குப் பின்னர், நிர்வாணமான நிலையில், அம்மாணவியின் சடலம் அப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அம்மாணவியை 14 இளைஞர்கள் சேர்ந்து கற்பழித்துள்ளனர். அவர்களில் 12 பேர் தற்போது காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இச்சம்பவம் தற்போது அந்நாட்டில் நட்பு ஊடகங்களில் பரவி வரும் நிலையில், இத்துயரச் சம்பவத்தை அறிந்த இந்தோனிசியர்கள் அரசாங்கத்திற்கு எதிராக கடும் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.