கோலாலம்பூர் – 1எம்டிபி (1Malaysia Development Berhad) நிறுவனத்தின், ஆலோசனை வாரியத்தை கலைப்பதாக மலேசிய நிதியமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக அரசாங்கத்தை உலுக்கியுள்ள இந்த தேசிய நிதியினைக் குறைக்கும் பொருட்டு, எஞ்சியுள்ள சொத்துக்களை அது கையகப்படுத்திக் கொள்ளவும் முடிவெடுத்துள்ளது.
1எம்டிபி-யில் நிர்வாக முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கண்டறிந்ததையடுத்து, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தலைமையிலான 1எம்டிபி ஆலோசகர்கள் குழுவை கலைக்குமாறு கடந்த மாதம் பொதுக் கணக்குக் குழு (Public Accounts Committee) அறிவித்தது.
அதன் அடிப்படையில், 1எம்டிபி-யில் பங்குதாரராக இருக்கும் நிதியமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில், பொதுக்கணக்குக் குழுவின் பரிந்துரைகளின் படி, ஆர்ட்டிக்கிள் 117 -ஐ நீக்குவது, நிறுவனத்தின் ஆவணங்களில் “பிரதமர்” என்று மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ளவைகளில் “நிதியமைச்சர்” என்று மாற்றுவது உள்ளிட்டவைகளைப் பின்பற்றுவதாகத் தெரிவித்துள்ளது.
1எம்டிபியின் முதலீடுகள், வாரிய இயக்குநர்களின் நியமனம் உள்ளிட்ட 1எம்டிபியின் அத்தனை நிதி பொறுப்புகளுக்கும் பிரதமரின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் வேண்டும் என்கிறது ஆர்டிக்கில் 117.
மேலும், 1எம்டிபியின் துணை நிறுவனங்கள் மற்றும் நில சொத்துக்களான பண்டார் மலேசியா செண்ட்ரியான் பெர்ஹாட், டிஆர்எக்ஸ் சிட்டி செண்ட்ரியான் பெர்ஹாட், ஆயர் ஈத்தாம் மற்றும் புலாவ் இண்டா ஆகியவற்றின் உரிமை நிதியமைச்சிற்கு மாற்றம் செய்யப்படுவதாகவும் அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
என்றாலும், இந்த சொத்துக்களுடன் தொடர்புடைய கடன்கள் என்ன ஆயிற்று என்பதை அமைச்சு தெரிவிக்கவில்லை.
மேலும், அந்த அறிக்கையில், பொறுப்பில்லாமல் 1எம்டிபி நிதியைக் கையாண்ட வாரியத்தை சாடியுள்ள நாடாளுமன்றக் குழு, 1எம்டிபி-யின் முன்னாள் தலைமைச் செயலதிகாரியை விசாரணை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது. ஆனால் நஜிப்பைப் பற்றிக் குறிப்பிடுவதில் அளவோடு நிறுத்திக் கொண்டுள்ளது.
அதேவேளையில், பொதுக் கணக்குக் குழுவின் அறிக்கையைத் தொடர்ந்து, 1எம்டிபி வாரிய இயக்குநர்கள் கூட்டாக இராஜினாமா செய்ததை ஏற்றுக் கொள்வதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
அப்பதவிகளுக்குப் புதிதாக உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் அவ்வறிக்கை கூறுகின்றது.
எனினும், 1எம்டிபி தலைவர் அருள் கந்தா தனது பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.