புதுடெல்லி – விஜய் மல்லைய்யாவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுள்ளது. வங்கிகளில் ரூ.9,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி விட்டு இங்கிலாந்தில் பதுங்கியுள்ளார் விஜய் மல்லைய்யா.
இவரது மாநிலங்களவை உறுப்பினர் (எம்பி) பதவியை பறிக்க மாநிலங்களவை நெறிமுறை குழு முடிவெடுக்க இருந்த நிலையில், தானே ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பினார் மல்லைய்யா. ஆனால் உரிய நடைமுறை கடைப்பிடிக்கவில்லை.
கடித நகலைத்தான் அனுப்பியுள்ளார் என மாநிலங்களவை தலைவர் ஹமீது அன்சாரி நிராகரித்தார். இதையடுத்து, மல்லைய்யாவை மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க மாநிலங்களவை நெறிமுறை குழு நேற்று பரிந்துரைத்துள்ளது.
கரண்சிங் தலைமையிலான நெறிமுறைக்குழு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த தனது அறிக்கையில், ‘‘மல்லைய்யாவின் நெறிதவறிய நடத்தைகளையும், நாடாளுமன்றத்தின் தற்போதுள்ள சூழ்நிலையையும் கருத்தில் கொள்ளும்போது, அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பறிப்பதை தவிர வேறு வழியில்லை. அவரை பதவியிலிருந்து உடனே நீக்க வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், ராஜினாமா நிராகரிப்பு பற்றி மல்லையாவுக்கு மாநிலங்களவை செயலாளர் ஜெனரல் தெரிவித்தார். இதையடுத்து புதிய கடிதத்தை மல்லைய்யா அனுப்பினார்.
இதை மாநிலங்களவை தலைவர் ஹமீது அன்சாரி ஏற்றுள்ளார் என துணை தலைவர் பி.ஜே.குரியன் தெரிவித்தார். மல்லைய்யாவின் பதவிக்காலம் அடுத்த மாதம் 1-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.