சென்னை – சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை, ஓசூரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக சில கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது.
இந்நிலையில் கட்சியினரை உற்சாகப்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கிளம்பும் மோடி கோவை வருகிறார்.
அங்கிருந்து ஹெலிகாப்டரில் கேரள மாநிலம் பாலக்காடு செல்லும் அவர் அங்கு நடைபெறும் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
அந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டரில் கோவை வரும் அவர் மாலை 4.15 மணிக்கு விமானம் மூலம் பெங்களூர் செல்கிறார். பெங்களூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஓசூர் வந்து அங்கு நடக்கும் கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
கூட்டம் முடிந்த பிறகு ஹெலிகாப்டரில் பெங்களூர் செல்லும் அவர் அங்கிருந்து தனி விமானத்தில் மாலை 6.30 மணிக்கு சென்னை வருகிறார். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கும் கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களான தமிழிசை சவுந்தரராஜன், ராஜா உள்ளிட்டோரை ஆதரித்து பேசுகிறார்.
இரவு 8.30 மணிக்கு அவர் தனி விமானம் மூலம் டெல்லிக்கு கிளம்புகிறார். மீண்டும் அவர் 8 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.