Home Featured தமிழ் நாடு ஜெயலலிதா வழக்கு: மே 13-ஆம் தேதிக்குள் வாதங்களை முடிக்க நீதிபதிகள் உத்தரவு!

ஜெயலலிதா வழக்கு: மே 13-ஆம் தேதிக்குள் வாதங்களை முடிக்க நீதிபதிகள் உத்தரவு!

551
0
SHARE
Ad

jejalalithaகர்நாடக – முதல்வர் ஜெயலலிதா உள்பட நான்கு பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையில் மே 13-ஆம் தேதிக்குள் அனைத்து தரப்பினரும் வாதங்களை முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.

20-ஆவது நாளான நேற்று கர்நாடக அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா தன்னுடைய 2-ஆவது சுற்று வாதத்தில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் 6 நிறுவனங்களை நிறுவியதன் காரணமே முறையற்ற வருவாயை இந்த நிறுவனங்கள் வழியாக பகிர்ந்து கொள்வதற்காகத்தான், இந்த நிறுவனங்களில் பணப்பரிமாற்றம் காசோலை வழியாகவும் ரொக்கமாகவும் தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த நிறுவனங்களில் பணம் முதலீடு செய்யப்பட்டது. இதற்காக பல வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன என்று கூறினார். அப்போது நீதிபதிகள், எத்தனை வங்கி கணக்குகள், எவ்வளவு தொகை என்று கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த ஆச்சார்யா, மொத்தம் 52 வங்கி கணக்குகள் இந்தியன் வங்கி மற்றும் கனரா வங்கிகளில் தொடங்கப்பட்டுள்ளன. ரூ.15 கோடி வரை பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் ரூ.30 லட்சம் முதல் 50 லட்சம் வரை பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

இந்த 6 நிறுவனங்கள் தவிர ‘ஜெயா பப்ளிகேஷன்ஸ்’ மற்றும் ‘சசி என்டர்பிரைசஸ்’ ஆகிய நிறுவனங்கள் அனைத்தும் போலியான பினாமி நிறுவனங்கள். இந்த நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் தான் மற்ற 6 நிறுவனங்களும் உள்ளன.

நிறுவனங்களின் பெயர்களில் உள்ள வங்கி கணக்குகளுக்கு பணமாக செலுத்தப்பட்ட தொகையினை காசோலை மூலமாக நடைபெற்றதாக போலி ஆவணங்களை சமர்ப்பித்து உள்ளனர் என்றார்.

இதற்கு நீதிபதிகள், உங்கள் குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரமும் ஆவணங்களும் உள்ளதா? என்று கேட்டனர். அதற்கு அவர் அவற்றை பின்னர் தாக்கல் செய்வதாக கூறினார் ஆச்சார்யா.

இன்னும் எத்தனை நாட்கள் உங்கள் வாதங்களை தொடருவீர்கள் என்று நீதிபதிகள் கேட்டதற்கு, அது தனக்கு தெரியாது என்றும் தனக்கு மேலும் அவகாசம் தேவை என்றும் அவர் கூறினார்.

இதற்கு நீதிபதிகள் அனைத்து தரப்பினரும் மே 13-ஆம் தேதிக்குள் தங்கள் வாதங்களை முடித்துக் கொள்ள வேண்டும் என்று கண்டிப்புடன் கூறினர்.