புதுடெல்லி – பாரதிய ஜனதா கட்சி ஜனநாயக விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாக கூறி, டெல்லியில் தடையை மீறி பேரணி நடத்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
ஜனநாயகத்தை காப்போம் என்ற முழக்கத்துடன் காங்கிரஸ் கட்சியினர் இன்று டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பேரணி நடத்தினர். பேரணியின் முடிவில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய சோனியா காந்தி, ஜனநாயக விரோத சக்திகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி எப்போது போராட்டம் நடத்தும் என கூறினார்.
கடந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில் மோடி அரசு எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்து நாட்டை சீர்குலைக்கும் பாதையில் இருப்பதாக குற்றம்சாட்டினார்.
போராட்டத்திற்கு பின் தடையை மீறி நாடாளுமன்ற வளாகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற காங்கிரஸ் தொண்டர்களை போலீசர் தடுத்தி நிறுத்த முயன்றனர்.
போலீசாரின் தடைகளை மீறி அவர்கள் செல்ல முயன்றதால் போலீசாருக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து, மன்மோகன்சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.