கோலாலம்பூர் – பருவவயது மாணவரை மாணவர்விடுதியின் (ஹாஸ்டல்) கண்காணிப்பாளர் (வார்டன்) ஒருவர் அடித்துத் துன்புறுத்தும் காணொளி ஒன்று தற்போது பேஸ்புக் உள்ளிட்ட ஊடகங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.
அக்காணொளி பல்வேறு தரப்பினர் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, தற்காத்துக் கொள்ள இயலாத நிலையில் இருக்கும் ஒரு மனிதனின் மீது நடத்தப்பட்ட வன்முறையாகக் கருதப்படுகின்றது.
மைவாட்ச் அமைப்பின் தலைவர் ஸ்ரீசஞ்சீவன் ராமகிருஷ்ணன் (படம்) தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள அக்காணொளியில், சிலாங்கூரைச் சேர்ந்த பள்ளி ஒன்றின் வார்டன், படிகட்டு அருகே நான்காம் படிவ மாணவர் என நம்பப்படும் ஒருவரை, பலமுறை கடுமையாக அடிப்பது பதிவாகியுள்ளது.
அவர் புகைப்பிடிக்க முயற்ச்சி செய்யும் போது அம்மாணவர் வார்டனிடம் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகின்றது.
இது குறித்து சஞ்சீவன் கூறுகையில், “அந்த வார்டன் மீண்டும் மீண்டும் அம்மாணவரை அடிப்பது அறிவற்ற செயலாகத் தெரிவதோடு, அது மிகவும் மிகையானதாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், வார்டன் இன்னும் பலமாக அவரைத் தாக்கிவிடக்கூடும் என்று உணரும் மற்ற மாணவர்கள், வார்டனை சமாதானப்படுத்தி, அம்மாணவரை அங்கிருந்து விலக்குகின்றனர் என்றும் அந்தக் காணொளி குறித்து சஞ்சீவன் தெரிவித்துள்ளார்.
வார்டனிடம் சிக்கும் போது அம்மாணவர் தனது சிகரெட்டைப் பற்ற வைக்கவில்லை என்றும் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
“அம்மாணவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை மைவாட்ச் ஆதரிக்கிறது, ஆனால் வார்டனின் செயல் மிகையானது” என்றும் சஞ்சீவன் தெரிவித்துள்ளார்.
மேலும், இத்தாக்குதலால் அம்மாணவருக்கு ஏதேனும் காயங்கள் ஏற்பட்டிருந்தால், அந்த வார்டனின் செயலுக்கு சம்பந்தப்பட்ட பள்ளி தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் சஞ்சீவன் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் காணொளியைக் கண்ட இணையவாசிகளில் பலர், வார்டனின் செயலுக்கு ஆதரவாகவும், அவரது செயலுக்கு எதிராகவும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.