சென்னை – தலைவர் திருமாவளவன் தலைமைதான் இன்றைய தமிழகத்துக்குத் தேவை. அவரைப் போன்ற பக்குவமான தலைவர் யாருமில்லை என்று நடிகர் சத்யராஜ் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தேர்தலில் நடிகர் சத்யராஜ் வெளிப்படையாக தனது ஆதரவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குத் தெரிவித்துள்ளார். அவர் சமீபத்தில் வெளியிட்ட பதிவில், “எல்லா மதத்திலும் ஜாதிய கொடுமைகள், ஜாதிய வன்முறை, பெண் அடிமைத்தனம், எல்லா இடத்திலும் இருக்கு.
புரட்சியாளர் அம்பேத்கர் போட்ட பாதையில்தான் நாம், நடைபோட வேண்டும். அந்தப் பாதையில் நம்மை அழைத்துச் செல்ல தலைவர் திருமாவளவன் இருக்கிறார். அவர் கையைப் பிடித்துக் கொண்டு அம்பேத்கர் அவர்களுடைய பாதையில் நடை போட வேண்டியது ஒவ்வொருவருடைய கடமை. இந்த சூழ்நிலைக்கு மிக மிக அவசியமான ஒன்று.
ஜாதி மறுப்பே தமிழர் விடுதலை. இதுதான் விடுதலைச் சிறுத்தைகளுடைய முக்கியமான கொள்கை. என்னுடைய முடிவும் எண்ணமும் கூட அதுதான். அப்படிப்பட்ட மாபெரும் புரட்சியாளரான அம்பேத்கரின் எண்ணங்களை உள்வாங்கி, அந்தப் போராட்டத்தின் வடிவத்தை தமிழ்நாட்டுக்குத் தகுந்த சட்டமன்ற உறுப்பினர் முன்னெடுத்துச் செல்வதில் தம்பி திருமாவளவனுக்கு இணை வேறு யாருமே இல்லை.
தலைவர் திருமாவளவனைப் பொறுத்தவரையில் இந்த பயம் எதுவும் அவருக்கில்லை. மக்கள் விடுதலை, மக்களின் நன்மை, மண் சார்ந்த விடுதலை மட்டும்தான் அவருடைய எண்ணத்தில் இருக்கும். அதனால் ஆணித்தரமாக சொல்ல வேண்டிய கருத்துக்களை யாருக்கும் அஞ்சாமல் அற்புதமாகச் சொல்லி வருகிறார்.
அண்ணல் அம்பேத்கர் சொன்னது அதுதான். கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்… கற்பித்த பிறகுதான் புரட்சி செய்ய முடியும். கற்பிக்காமல் செய்தால் அது புரட்சியாக இருக்காது. வன்முறையாகத்தான் மாறும். திருமா தன் தோழர்களுக்கு கற்பித்த பிறகு ஒன்று சேர்க்கிறார். புரட்சி செய்கிறார். இதுதான் தலைவர் திருமாவளவனின் சிறப்பு.
திருமாவளவன் மிகச் சிறந்த சிந்தனையாளர், புரட்சியாளர், விடுதலை வீரர். தமிழ்நாட்டுக்குத் தலைமை ஏற்கும் காலம் வந்தால், அது அவருக்கு நன்மை என்று சொல்ல மாட்டேன். தமிழக மக்களுக்கு நன்மை.
ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஏமாற்றப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கு நன்மை. இப்படியொரு தலைமைதான் தமிழகத்துக்கு வேண்டும்,” என்று கூறியுள்ளார் நடிகர் சத்யராஜ்.