Home Featured தமிழ் நாடு தமிழகத் தேர்தல்: தந்தி டிவி கருத்துக்கணிப்பு – முடிவுகளைத் தவிர்த்தது!

தமிழகத் தேர்தல்: தந்தி டிவி கருத்துக்கணிப்பு – முடிவுகளைத் தவிர்த்தது!

1094
0
SHARE
Ad

Thanthi TV-logoசென்னை – தமிழகத்தின் முக்கிய நடுநிலை செய்தித் தொலைக்காட்சிகள் தொடர்ந்து நடைபெறவிருக்கும் தமிழகத் தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

கடந்த சில நாட்களாக தொகுதிவாரியாக ஒவ்வொரு தொகுதியிலும் எந்தக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்ற முடிவுகளை ‘மக்கள் யார் பக்கம்’ என்ற நிகழ்ச்சியின் மூலம், தந்தி தொலைக்காட்சியின் முதன்மை செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே (படம்), தொகுத்து வழங்கி வந்தார். ஒரு சந்தை ஆய்வு நிறுவனத்தின் துணையுடன் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

Rangaraj Pandey-Thanthi TVநேற்று வெள்ளிக்கிழமையுடன் முடிவுக்கு வந்த தந்தி தொலைக்காட்சியின் இந்தக் கருத்துக் கணிப்பு நிகழ்ச்சியின் இறுதியில், எந்தக் கட்சி அதிகத் தொகுதிகளை வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்ற முடிவை மட்டும் தந்தி தொலைக்காட்சி அறிவிக்காமல் தவிர்த்து விட்டது.

#TamilSchoolmychoice

“அத்தகைய முடிவைச் சொல்வது எங்கள் நோக்கமல்ல. ஒவ்வொரு தொகுதியிலும் என்ன நிலைமை என்பதை மக்களுக்கு எடுத்துக் காட்டுவதுதான் எங்களின் நோக்கம். இருப்பினும் மே 16ஆம் தேதி வாக்களிப்பு முடிவடைந்ததும், அன்று மாலை 6.30 மணியளவில் தந்தி தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்படும். அந்த முடிவுகள் பின்னர் 19ஆம் தேதி வெளியாகப் போகும் அதிகாரபூர்வ முடிவுகளுடன் ஒத்துப் போகிறதா என்ற என்பதும் 19ஆம் தேதி ஆராயப்படும்” என ரங்கராஜ் பாண்டே கூறியுள்ளார்.

வாக்களிப்பு முடிந்ததும் வாக்களித்த வாக்காளர்களின் மனநிலையை எடுத்துக் காட்டும் “எக்சிட் போல்” ( Exit Poll) எனப்படும் வாக்களித்தவர்களின் கருத்துக் கணிப்பு ஒன்றும் வெளியிடப்படும் என்றும் பாண்டே தனது நிகழ்ச்சியின் முடிவில் தெரிவித்துள்ளார்.

தந்தி தொலைக்காட்சி கருத்துக் கணிப்புகள் காட்டுவது என்ன?

தந்தி தொலைக்காட்சி தொடர்ந்து வழங்கி வந்த கருத்துக் கணிப்புகளை வைத்துப் பார்க்கும்போது, பல தொகுதிகளில் அதிமுக குறுகிய பெரும்பான்மையில் முன்னணி வகிப்பதும், பல தொகுதிகளில் அதிமுக-திமுக இடையில் கடுமையான போட்டிகள் நிலவுவதையும் காண முடிகின்றது.

பெரும்பாலான தொகுதிகளில் ஏறத்தாழ 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரையிலான வாக்காளர்கள் இன்னும் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுக்காமல் இருக்கிறார்கள் என்பதையும் இந்தக் கருத்துக் கணிப்புகள் காட்டியுள்ளன.

மேலும், மக்கள் நலக்கூட்டணி, தேமுதிக, பாமக, நாம் தமிழர் கட்சி, ஆகிய கட்சிகள் ஒவ்வொரு தொகுதியிலும் கணிசமான வாக்குகளை – சில தொகுதிகளில் ஏறத்தாழ 20 சதவீதம் வரையிலான வாக்குகளைப் பிரிக்கக் கூடும் என்பதையும் இந்த தந்தி தொலைக்காட்சி கருத்துக் கணிப்புகள் எடுத்துக் காட்டியுள்ளன.

ஆனால், பிரிக்கப்படும் இந்த வாக்குகள் அதிமுகவுக்கு செல்லுமா அல்லது திமுகவுக்கு செல்லுமா என்பதை வைத்துத்தான் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வாய்ப்புகள் நிர்ணயிக்கப்படும்.

-இரா.முத்தரசன்

(செல்லியல் நிர்வாக ஆசிரியர்)