கூச்சிங் – சரவாக் மாநிலத்தில் மிகப் பெரிய பெரும்பான்மையில் வெற்றி பெற்ற அட்னான் சாத்திம் தனது புதிய மாநில அமைச்சரவையில் 3 துணை முதல் அமைச்சர்களை நியமித்துள்ளார்.
டத்தோ அமார் அபாங் ஜொஹாரி துன் ஓப்பெங்
டத்தோ அமார் டக்ளஸ் உங்கா எம்பாஸ், டான்ஸ்ரீ டாக்டர் ஜேம்ஸ் ஜெமுட் மாசிங், டத்தோ அமார் அபாங் ஜொஹாரி துன் ஓப்பெங் ஆகிய மூவரையும் சரவாக் மாநிலத்தின் துணை முதலமைச்சர்களாக அட்னான் சாத்திம் நியமித்துள்ளார்.
இவர்களில் டக்ளஸ் உங்கா சரவாக்கின் விவசாய நவீனத்துவ மற்றும் புறநகர் பொருளாதார அமைச்சராகவும், ஜேம்ஸ் ஜெமுட் மாசிங் மாநில உட்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சராகவும், போக்குவரத்து அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அபாங் ஜொஹாரி சுற்றுலா, கலை, பண்பாட்டு அமைச்சு, வீடமைப்பு மற்றும் நகர்மயமாக்குதல் அமைச்சு ஆகிய இரண்டு அமைச்சுக்களின் பொறுப்புக்களை வகிப்பார்.
சரவாக் மாநிலத்தை சிறப்பாக ஆள்வதற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவும், ஒத்துழைப்பும் தனக்குத் தேவை என்றும் சரவாக் முதல்வர் அட்னான் சாத்திம் தெரிவித்துள்ளார்.
மூன்று துணை அமைச்சர்களையும் அட்னான் நியமித்துள்ளார்.
துணை முதலமைச்சர்களில் ஜெமுட் மாசிங் பார்ட்டி ராக்யாட் சரவாக் (பிஆர்எஸ்) கட்சியின் தலைவராவார். இவரது கட்சி போட்டியிட்ட அனைத்து 11 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
அபாங் ஜொஹாரி அட்னான் சாத்திம் தலைவராக இருக்கும் பார்ட்டி பெசாகா பூமிபுத்ரா கட்சியின் துணைத் தலைவராவார்.
இந்த நியமனங்களைத் தொடர்ந்து ஏன் சீன துணை முதலமைச்சர் ஒருவர் நியமிக்கப்படவில்லை என்ற கேள்வியும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.