Home Featured நாடு கெடா மாநிலம் ஏற்று நடத்தும் ‘பன்னாட்டு அருங்காட்சியக நாள்’

கெடா மாநிலம் ஏற்று நடத்தும் ‘பன்னாட்டு அருங்காட்சியக நாள்’

650
0
SHARE
Ad

Kedah musiumகோலாலம்பூர் – “அருங்காட்சியகம் என்பது ஒரு காட்சி பொருட்கூடம் என்று மக்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். மாறாக அது கலை, கலாச்சாரம், வரலாறு மற்றும் பிற விஷயங்களை உள்ளடக்கியதாக உள்ளது.” என்கிறார் தேசிய அருங்காட்சியங்களின் தலைமை இயக்குனர் கமாருல் பஹாரின்.

பன்னாட்டு அருங்காட்சியக நாள் ஆண்டு தோறும் மே 18-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் வேளையில், இவ்வாண்டு கெடா மாநிலம் அதை தலைமை ஏற்று நடத்தும் என அது தொடர்பாக நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கமாருல் தெரிவித்துள்ளார்.

பன்னாட்டு அருங்காட்சியக நாள் மே 18-ஆம் தேதியாக இருந்தாலும், அதன் கொண்டாட்டம் பல பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் மே 16-ஆம் தேதியே தொடங்கப்படவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளோடு முன்னெடுக்கும் இந்த நிகழ்ச்சியில் இவ்வாண்டு (Museum and cultural landscapes) என்ற கருப்பொருளை தேசிய அருங்காட்சியம் தேர்வு செய்திருக்கிறது.

#TamilSchoolmychoice

கடந்த 20 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வந்தாலும் கெடா மாநிலத்தில் நடக்கவிருப்பது இதுவே முதல் முறையாகும். அதனால், அம்மாநிலத்தில் இதுப்பற்றிய எதிர்பார்ப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றுப்பூர்வமான நிகழ்வை தொடக்கிவைக்க கெடா மாநிலத்தின் மேன்மைதங்கிய சுல்தான் டத்தோஸ்ரீ டி ராஜா டான்ஸ்ரீ துங்கு சலேஹுடின் இப்னி அல்மார்ஹும் சுல்தான் பாட்லிஷா அதிகாரப்பூர்வ வருகையை மேற்கொள்ளவிருக்கிறார்.

இதனால், இவ்வாண்டுக்கான பன்னாட்டு அருங்காட்சியக கொண்டாட்டத்தின் வருகையாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வரும் மே 16-ஆம் தேதி தொடங்கி மே 21-ஆம் தேதிவரை சுமார் 6 நாட்களுக்கு நடக்கவிருக்கும் இந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் பொது மக்களும் கலந்து கொள்ளும் வகையில் பல நிகழ்ச்சிகளும், போட்டி விளையாட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தேசிய அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.

இதில் முத்தாய்ப்பாக குழுக்கள் சீட்டு பரிசுகள் அமைந்துள்ளன. முதல் பரிசு ஒரு மாடும், இரண்டாவது பரிசு ஆடும், மூன்றாவது நான்காவது பரிசுகளாக வாத்துகள் மற்றும் கோழிகள் வழங்கப்படவுள்ளன.

இறுதிப் பரிசாக ஒரு மோட்டார் வண்டி வழங்கப்படவுள்ளது. விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் நோக்கத்தில் இந்த பரிசுப்பொருள்களை ஏற்பாடு செய்திருப்பதாக கமாருல் பஹாரின் தெரிவித்துள்ளார்.

குறிப்பு: மே 18-ஆம் தேதி, பன்னாட்டு அருங்காட்சியக நாளை முன்னிட்டு மலேசியாவிலுள்ள 100-க்கும் அதிகமான அருங்காட்சியங்களை பொதுமக்கள் எவ்வித கட்டணமும் இல்லாமல்  பார்வையிடலாம் என தேசிய அருங்காட்சியம் அறிவித்துள்ளது.

தகவல், படம் – நன்றி (யோகி)