பெங்களூர் – பெங்களூரிலிருந்து சென்னைக்கு வந்த தனியார் பேருந்தில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த ‘தெறி’ படம் ஒளிபரப்பாகியுள்ளது. இதைப் பார்த்த பயணி ஒருவர், விஷாலை தொலைபேசியில் தொடர்புகொண்டு கூறியுள்ளார்.
உடனே விஷால், அதை ஆதாரத்துடன் உறுதி செய்யவேண்டும் என்பதற்காக, அந்த பயணியிடம் காணொளி எடுத்து அனுப்பச் சொல்லியதாகத் தெரிகிறது, உடனே அந்தப் பயணியும் காணொளி எடுத்து அனுப்பியுள்ளார்.
அதைத் தொடர்ந்து திருட்டு விசிடி தடுப்பு சிறப்பு ஆய்வாளர் ஜெயலட்சுமியிடம் புகார் கொடுத்துள்ளார் விஷால். அந்தப் புகாரின் பேரில், ஆய்வாளர் நந்தகுமார் மற்றும் மகேந்திரன் அன்று காலை மதுரவாயல் அருகே அந்த தனியார் பேருந்தை மடக்கிப் பிடித்து ஓட்டுநரைக் கைது செய்தனர்.
ஏற்கெனவே, திருட்டு விசிடியை ஒழிப்பேன் என்று விஷால் சபதமிட்டிருந்தார். மேலும் மருது பட வெளியீட்டின் போது நானே களத்தில் இறங்கி திருட்டு விசிடியை கையும் களவுமாகப் பிடிப்பேன் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.