Home Featured தமிழ் நாடு தமிழகத் தேர்தல்: நட்சத்திரத் தொகுதிகள் # 4 – “அன்புமணியாகிய நான்…” போட்டியிடும் பென்னாகரம்!

தமிழகத் தேர்தல்: நட்சத்திரத் தொகுதிகள் # 4 – “அன்புமணியாகிய நான்…” போட்டியிடும் பென்னாகரம்!

1122
0
SHARE
Ad

ANBUMANI RAMADOSS_சென்னை – கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து 39 தமிழ் நாட்டுத் தொகுதிகளையும் அதிமுக கபளீகரம் செய்ய – ஜெயலலிதாவின் அதிரடித் தாக்குதலையும் மீறி தப்பிப் பிழைத்தவை இரண்டே தொகுதிகள்தான்! அதில் ஒன்றுதான் பாமக தலைவர் இராமதாசின் புதல்வரும், அந்தக் கட்சியின் இளைஞர் அணித் தலைவருமான அன்புமணி போட்டியிட்டு வென்ற தர்மபுரி!

சாதி மாறிய காதலால் அங்கு நிகழ்ந்த இளவரசன் (திவ்யா) படுகொலை- சொந்த சாதி ஓட்டுகள் போன்ற அம்சங்கள் அன்புமணியின் வெற்றிக்கான காரணங்களாகச் சொல்லப்பட்டாலும், இறுதியில் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடிய வகையிலும் அதிலும் ஜெயலலிதா ஆதரவு அலைகளுக்கு மத்தியில் வெற்றி பெற்றதும், அன்புமணியின் தனித் திறமைக்கும், தனித்துவத்திற்கும் கிடைத்த வெற்றிகளாகும்.

அந்த தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் உள் அடங்கிய பென்னாகரம்தான் – தனக்குப் பாதுகாப்பாக இருக்கும் – என்ற எண்ணத்தில் அன்புமணி போட்டியிடும் தொகுதி. கர்நாடக மாநில எல்லைக்கு அருகிலிருக்கும் தொகுதி இது.

#TamilSchoolmychoice

சாதகங்கள் என்ன?

ஏற்கனவே, நாடாளுமன்ற உறுப்பினராக வென்ற தொகுதி என்பதால், பிரச்சாரம் என்று வரும்போது அன்புமணிக்கு வசதிதான். 50 சதவீத வாக்காளர்கள் அன்புமணியின் வன்னியர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பது இவருக்கு இருக்கும் இன்னொரு சாதகம்.

முதலமைச்சர் வேட்பாளராகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளதால், அதன் காரணமாக, ஏற்பட்டிருக்கும் பிம்பமும் அவருக்கு உதவக் கூடும்.

இருப்பினும், மற்ற சாதியினரின் வாக்குகள், குறிப்பாக, தலித் இன வாக்குகள் அன்புமணிக்குக் கிடைக்காது என்பது அவருக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகின்றது. தேர்தல் நெருங்கும் இறுதி நேரத்தில் பாமகவின் சட்டமன்ற வேட்பாளர்கள் இதுவரை 3 பேர் கட்சி தாவியிருப்பதும் அன்புமணிக்கு ஏற்பட்டிருக்கும் மற்றொரு பின்னடைவாகப் பார்க்கப்படுகின்றது.

Sowmya-Anbumaniஅன்புமணிக்காக, தொகுதியில் சுற்றிச் சுழன்று பிரச்சாரம் செய்துவரும் அவரது மனைவி சௌமியா அன்புமணியின் (படம்) பிரச்சாரமும் அவருக்குக் கிடைத்திருக்கும் மற்றொரு சாதக அம்சமாகப் பார்க்கப்படுகின்றது.

எதிர்ப்பவர்கள் யார்?

அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி போட்டியிட, திமுக சார்பில் நிற்பவர் பி.என்.பி.இன்பசேகரன்.

முனுசாமியும் வன்னியர் சமூகத்தினரிடையே மிகுந்த செல்வாக்கு கொண்டவர் என்பதோடு, ஆரம்பம் முதல் அதிமுகவில் இருப்பவர் என்பதால், இரட்டை இலை சின்ன கட்சித் தொண்டர்களிடையே ஆதரவையும் பெற்றவர். இதனால் இவர்களுக்கிடையில் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

திமுக சார்பில் நிற்கும் இன்பசேகரனும் அந்த வட்டாரத்தில் பெரிய தொழிலதிபர் என்பதால், அவருக்கும் கணிசமான செல்வாக்கு இருப்பதாகக் கணிக்கப்படுகின்றது. இன்பசேகரனின் தந்தையார் பெரியண்ணன் 2006ஆம் ஆண்டில் இதே தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வென்றவர். 2010இல் அவரது மரணத்தால் நடத்தப்பட்ட இடைத் தேர்தலில் அவரது மகன் இன்பசேகரன் இங்கு போட்டியிட்டு வென்றார் என்பது அன்புமணிக்கு எதிராக நிற்கும் இவருக்கு இருக்கும் மற்றொரு கூடுதல் பலம்.

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில் அன்புமணி இந்தத் தொகுதியில் தோல்வியடைவார் – அதுவும் திமுக, அதிமுகவுக்கு அப்புறம்  மூன்றாவது நிலையில் பின்தங்கியிருக்கின்றார் என்ற முடிவு வெளியிடப்பட, அன்புமணியோ பொங்கி எழுந்துவிட்டார். அந்தக் கருத்துக்கணிப்பை பொய்யாக்கிக் காட்டுகின்றேன் என சூளுரைத்துள்ளார்.

இதற்கிடையில் தந்தி தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில் அன்புமணியே பென்னாகரம் தொகுதியில் முன்னணி வகிக்கின்றார் எனக் கூறப்பட்டிருப்பது அன்புமணிக்கு கொஞ்சம் சாந்தத்தை ஏற்படுத்தலாம்.

இருப்பினும், திமுக-அதிமுக என இரு பெரும் கட்சிகளின் வேட்பாளர்களுமே பலம் வாய்ந்தவர்கள் என்பதால், அன்புமணி கடுமையான போட்டிக்கிடையில்தான் – சொற்ப வாக்கு வித்தியாசத்தில்தான் வென்று வர முடியும் என்பதுதான் நிதர்சனம்!

-செல்லியல் தொகுப்பு