கோலாலம்பூர் – தமிழகத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியில் அமரும் ஜெயலலிதாவுக்கு மஇகா சார்பிலும், மலேசியத் தமிழர்கள் சார்பிலும் மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
“மலேசியாவில் வாழும் இந்திய சமூகத்தினரில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள் என்ற முறையில், மொழி, இனம், கலாச்சாரம் என்ற அடிப்படையில் தமிழ்நாட்டுக்கும், மலேசியாவுக்கும் இடையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாரம்பரியத் தொடர்புகள் இருந்து வருகின்றன. அந்த வகையில், அந்த மாநிலத்தில் மீண்டும் ஆட்சியில் அமரும் அதிமுக அரசுடன் தொடர்ந்து நல்லிணக்கத்தையும், நல்லுறவையும் தொடர்ந்து மேலோங்கச் செய்யவும், பேணவும், மஇகா தொடர்ந்து பாடுபட்டு வரும்” என்றும் டாக்டர் சுப்ரா மேலும் கூறினார்.
ஆட்சியில் அமரும் ஜெயலலிதா அரசு, வெளிநாடுகளில் இலட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்கின்றார்கள் என்பதையும், மலேசியாவிலும் இலட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்கின்றார்கள் என்பதையும் கருத்தில் கொண்டு, வெளிநாட்டுத் தமிழர்களிடையே தமிழ் மொழியும், தமிழ்க் கலாச்சாரமும் நிலைநிறுத்தப்படுவதற்கும், வளர்ச்சி பெறுவதற்கும் பாடுபடும் எனத் தான் நம்புவதாகவும் டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.
அந்த வகையில் ஆட்சியில் அமரும் ஜெயலலிதா அரசுக்கு, தமிழர்களையும், இந்தியர்களையும் மலேசியாவில் பிரதிநிதிக்கும் கட்சி என்ற முறையில் மஇகா இயன்ற வழிகளில் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கிவருவதோடு நல்லுறவுகளை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் சுப்ரா தெரிவித்தார்.
தமிழகத் தேர்தலில் ஜெயலலிதா பெற்ற வெற்றி குறித்து ‘செல்லியல்’ கருத்து கேட்டபோது, டாக்டர் சுப்ரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.