அத்தகவல் குறித்து பலரும் பேசிக் கொண்டிருக்க, உண்மை நிலவரம் அறிய செல்லியல் அவரைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டது. தனது பேஸ்புக் பதிவு குறித்து அவர் அளித்த விளக்கத்தை முந்தைய செய்தியில் வெளியிட்டிருந்தோம்.
அச்செய்தியை அடிப்படையாகக் கொண்டு நடிகர் சூர்யாவிடமும் விளக்கம் கேட்டு முயற்சி செய்தோம்.
அதனைத் தொடர்ந்து, இவ்விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா இன்று தனது டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், இப்படி ஒரு நிகழ்ச்சியைப் பற்றிய தகவல் கூட தனக்குத் தெரியாது என்று தெரிவித்துள்ளார்.
சூர்யா வெளியிட்டுள்ள முழு அறிக்கை பின்வருமாறு:-
“அனைவருக்கும் வணக்கம், மலேசியத் தமிழ் பத்திரிகையில் எனக்கே தெரியாத என்னைப் பற்றிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. “மகா இந்து இளைஞர் ஒற்றுமை விழா” என்ற மதம் சார்ந்த நிகழ்வு நடைபெறவிருப்பதாகவும், அதில் நான் கலந்து கொள்ள லட்சக்கணக்கில் பணம் கேட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. சமூகவலைத்தளங்களில் அச்செய்தி பலரால் பகிரப்படுகின்றது.”
“இப்படி ஒரு நிகழ்ச்சியைப் பற்றிய தகவல் கூட எனக்குத் தெரியாது. கலந்துகொள்ளும் படி யாரும் என்னை அணுகவுமில்லை. கலைஞர்கள் சாதி, மதம், மொழி போன்ற எல்லா எல்லைகளையும் கடந்தவர்கள். கலைத்துறையில் இருக்கிற நான் மதம் தொடர்பான எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள சம்மதித்திருக்க மாட்டேன்.”
“சமூகவளர்ச்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஆர்வமாகக் கலந்து கொள்கிறேன் நான். அதற்காக எப்போதும் பணம் பெற்றதில்லை. பணம் வாங்கிக் கொண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாது என்ற கொள்கை உடையவன் நான். அப்படியிருக்க ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நான் பணம் கேட்டதாக வந்த செய்தியில் துளி கூட உண்மையில்லை.”
“மலேசியாவில் நடைபெறுவதாகச் சொல்லும் மகா இந்து இளைஞர் ஒற்றுமை விழாவிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விழா அமைப்பினர் என் பெயரைத் தவறாகப் பயன்படுத்தினால் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
மேலும் இது போன்ற தவறான தகவல்கள் பரப்பப்பட்டால் அதைப் புறக்கணித்து தன் மீது அன்பு கொண்டவர்கள் தனது முயற்சிகளுக்குத் துணையாக இருக்க வேண்டும் என்றும் சூர்யா கேட்டுக் கொண்டுள்ளார்.