கெய்ரோ – நேற்று காணாமல் போன எகிப்து ஏர் விமானத்தைத் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட நிலவரங்கள் பின்வருமாறு:
- நேற்று கடலில் காணப்பட்டதாகக் கூறப்பட்ட உடைந்த விமானப் பாகங்கள் எகிப்து ஏர் 804 விமானத்தின் பாகங்கள் அல்ல என எகிப்து ஏர் அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் விமானத்தின் உடைந்த பாகங்கள் கடல் பகுதியில் காணப்பட்டதாக அறிக்கை விடுத்த எகிப்து ஏர் பின்னர் அந்த அறிக்கையை மீட்டுக் கொண்டது.
- இந்த விமானம் முதலில் எரிடெரியா மற்றும் துனிசியாவுக்கு சென்று விட்டுத்தான் பாரிசில் தரையிறங்கியிருக்கின்றது.
- ஒரு குண்டு வெடிப்பினால் விமானம் வெடித்து கடலில் விழுந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
- விமானம் 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, வானிலை நன்றாக இருந்ததாகவும், எனவே, மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகியிருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகின்றது.
- விமானம் காணாமல் போனதற்கான காரணங்களை அதிகாரிகள் ஆராய்ந்து கொண்டிருக்கும்போதே இது பயங்கரவாதச் செயல் என அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
- விமானத்தைத் தேடும் பணிகளில் அமெரிக்க கடற்படையும் இணைந்துள்ளது.
- விமானத்திலிருந்து இறுதி நிமிடங்களில் விமானியிடமிருந்து எந்தவித அபாய அறிவிப்பும் வரவில்லை.
- விமானத்தில் இருந்த பயணிகளின் உறவினர்களுக்காக அவசர மையம் ஒன்றை பிரான்ஸ் ஏற்படுத்தியிருக்கின்றது
அமெரிக்க தொலைக்காட்சி சிஎன்என் வெளியிட்ட எகிப்து ஏர் 804 விமானத்தில் பயணப் பாதை…(படம் நன்றி : சிஎன்என்)