ஜோர்ஜ் டவுன் – இந்த ஆண்டு ஜூலை 6, 7ஆம் தேதிகளில் கொண்டாடப்படவிருக்கும் ஹரி ராயா புவாசா எனப்படும் நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பினாங்கு மாநில அரசாங்கம், சேவையிலுள்ள 4,178 மாநில அரசாங்க ஊழியர்களுக்கு அவர்களின் சேவைகளை மதிக்கும் வண்ணம் போனஸ் எனப்படும் ஊக்குவிப்பு ஊதியம் வழங்கவிருக்கின்றது.
மொத்தம் 7.95 மில்லியன் ரிங்கிட்டை போனசாக தனது பக்காத்தான் ஹாராப்பான் அரசாங்கம் வழங்கவிருப்பதாக, பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் நேற்று அறிவித்தார்.
ஒவ்வொரு அரசாங்க ஊழியரும் தனது சம்பளத்தில் முக்கால்வாசி பங்கு அல்லது குறைந்த பட்சம் 700 ரிங்கிட்டை போனசாக பெறுவார்கள்.
இந்த போனஸ் தொகை ஹரிராயா பெருநாளுக்கு முன்னதாகவே வழங்கப்படும் என்றும் லிம் குவான் எங் உறுதியளித்துள்ளார்.
இந்த போனஸ் தொகை உள்ளூர் மாவட்ட ஊழியர்களுக்கும், மாநில அரசாங்கத்தின் தனியார் நிறுவனங்களின் ஊழியர்களுக்கும்கூட வழங்கப்படும் என்றும் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆசிரியர்களுக்கு 300 ரிங்கிட்டும், பாலர் பள்ளி நிலையிலான ஆசிரியர்களுக்கு 200 ரிங்கிட்டும் கூடுதல் நிதி உதவியாக வழங்கப்படும் என்றும் இன்று பினாங்கு மாநில சட்டசபையில் உரையாற்றும்போது லிம் குவான் எங் அறிவித்தார்.
கடந்த ஆண்டும் இதே போன்று ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு மாநில அரசாங்க ஊழியர்களுக்கு அரை மாத சம்பளம் அல்லது குறைந்த பட்சம் 600 ரிங்கிட் போனசாக வழங்கப்பட்டது.