சென்னை _ தமிழக முதல்வராக 6-ஆவது முறையாக பொறுப்பேற்ற முதல்வர் ஜெயலலிதா தலைமை செயலகம் சென்று 500 மதுக்கடைகளை மூடுதல், மதுக்கடைகளின் நேர திறப்பை குறைத்தல், விவசாய பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
சட்டசபை தேர்தலில் 134 இடங்களைக் கைப்பற்றிய அதிமுக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு வளாக அரங்கத்தில் இன்று நடைபெற்ற விழாவில் 6-ஆவது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
ஜெயலலிதா மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர் ரோசய்யா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழா முடிவடைந்ததும் நேராக தலைமைச் செயலகம் சென்றார் ஜெயலலிதா. அங்கு அரசு அதிகாரிகள் ஜெயலலிதாவுக்கு மலர் கொத்துகொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதன் பின்னர் தம்முடைய அறையில் அமர்ந்து 5 முக்கிய கோப்புகளில் ஜெயலலிதா கையெழுத்திட்டார். – தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தும் வகையில்,முதல் கட்டமாக 500 சில்லறை மதுவிற்பனை கடைகளை மூடுதல் – டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகள் காலை 10 மணிக்கு திறக்கப்படுவதற்கு பதிலாக இனி பகல் 12 மணிக்கு திறக்கப்படும்.
கூட்டுறவு வங்கிகளில் கடந்த மார்ச் 31-ஆம் தேதிவரை சிறு, குறு விவசாயிகள் பெற்றிருந்த அனைத்து வகையான பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்.
வீடுகளில் 100 யூனிட் மின்சாரத்துக்கான கட்டணம் ரத்து செய்யப்படும் – விசைத்தறிகளுக்கு 750 யூனிட் வரையிலான மின்சாரத்துக்கு கட்டணம் இல்லை. கைத்தறிகளுக்கு 200 யூனிட் வரையிலான மின்சாரத்துக்கு கட்டணம் இல்லை.
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் ரூ50 ஆயிரம் நிதி உதவியுடன் 4 கிராமுக்கு பதில் 8 கிராம் தங்கம் வழங்கப்படும் ஆகிய உத்தரவுகளில் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.