புதுடெல்லி – பிரதமர் நரேந்திர மோடியை பிரபல பாலிவுட் நடிகை கஜோல் தேவ்கன் நேற்று புதன்கிழமை சந்தித்துப் பேசினார். ‘கை கழுவும்’ அவசியம் தொடர்பாக, தான் மேற்கொண்டு வரும் நாடு தழுவிய பரப்புரையின் வெற்றி குறித்து பிரதமருடன் ஆலோசனை நடத்தியதாக கஜோல் பின்னர் தெரிவித்தார்.
“கை கழுவும் அவசியத்தை குழந்தைகளிடையே வலியுறுத்தும் பரப்புரை’ திட்டத்தை இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.
இந்த பரப்புரையின் தூதுவராக பாலிவுட் நடிகை கஜோல் தேவ்கன் நியமிக்கப்பட்டு, அவர் மூலமாக பல்வேறு மாநிலங்களில் பரப்புரை நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டத்தின் வெற்றி குறித்து பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேற்று புதன்கிழமை கஜோல் சந்தித்து விளக்கினார். சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இச்சந்திப்பு குறித்து கஜோல் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கஜோல் கூறியதாவது: “கை கழுவும் அவசியத்தை வலியுறுத்தும் பரப்புரையை கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொண்டு வருவது பற்றி பிரதமரிடம் விளக்கினேன்.
பள்ளிகளில் தொடங்கி, இந்தப் பழக்கத்தை கட்டாயமாக்குவதால் ஏற்படும் நன்மை குறித்து மாணவர்களிடம் விளக்கியது பற்றியும் பிரதமரிடம் பேசினேன்.
பள்ளிகளில் கழிவறைகள் கட்டி அங்கு கடன்களை முடித்த பிறகு கை கழுவும் அவசியத்தை வலியுறுத்துவது மட்டும் போதாது; பள்ளிகளில் ஆங்காங்கே கை கழுவும் பகுதியை ஒதுக்கி அதைப் பயன்படுத்த வேண்டியதும் அவசியம் என பிரதமரிடம் கூறினேன்.
எனது முயற்சி மூலம் மாணவர்களிடையே பழக்கத்தை மட்டும் கற்பிக்கவில்லை; அவர்களின் சிந்தனையையும் மாற்றி வருகிறேன் என பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார்.
பிரதமரின் தூய்மை இந்தியா திட்டம் போலவே கை கழுவும் அவசியத்தை வலியுறுத்தும் பரப்புரையும் அமைந்துள்ளதால் அந்த திட்டத்துடன் எனது பரப்புரையையும் இணைக்கும் சாத்தியக் கூறுகள் பற்றி விவாதித்தோம் என்றார் கஜோல்.