ஜகார்த்தா – குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு அதிக பட்ச தண்டனையான மரண தண்டனையை விதிக்க, அரசாங்கக் கட்டுப்பாட்டில் அதனை அனுமதிக்கும் சட்டம் ஒன்றில் நேற்று புதன்கிழமை கையெழுத்திட்டுள்ளார் இந்தோனிசிய அதிபர் ஜோகா விடோடோ.
இந்தப் புதிய சட்டங்கள் மூலம் குற்றவாளிகளுக்கு, இரசாயனம் மூலம் ஆண் விதை நீக்குதல் (chemical castration), மின்னணு த் தகடுகளை உடலில் பொருத்தி அவர்களது செயல்பாடுகளைக் கவனித்தல், வாழ்நாள் சிறைத் தண்டனை, குறைந்தது 10 முதல் 20 வருட சிறைத் தண்டனை உள்ளிட்ட தண்டனைகளும் வழங்கப்படவுள்ளன.
இது குறித்து அதிபர் மாளிகையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய விடோடோ, “குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது அசாதாரணக் குற்றமாகும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த புதிய கட்டுப்பாடுகள் இது போன்ற பாலியல் குற்றங்களைக் குறைக்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 2-ம் தேதி, சுமத்ராவின் மேற்குப் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது மாணவியை, மது அருந்திவிட்டு போதையில் இருந்த கும்பல் ஒன்று காட்டிற்குள் இழுத்துச் சென்று கற்பழித்துக் கொலை செய்தது.
இந்தச் சம்பவம் அந்நாட்டு மக்களிடையே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியதோடு, அரசாங்கத்திற்கு எதிராகக் கடும் போராட்டங்களில் இறங்கினர்.
அதனைத் தொடர்ந்து, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் இந்தோனிசிய அரசாங்கம் கடும் சட்டங்களைக் கொண்டுவந்துள்ளது.