நெடுஞ்சாலையில் அவசர வழியை மறித்து இந்த 91 வாகனங்களும் சென்று கொண்டிருந்ததால், அந்த வழியே செல்ல முயன்ற அவசர ஊர்த்தி முன்னேறிச் செல்ல முடியாது சிக்கியது.
கடந்த மே 22-ம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பில் 91 வாகனங்களின் உரிமையாளர்களைக் கண்டறியும் பணியில் அதிகாரிகள் தற்போது மும்முரமாக இறங்கியுள்ளனர்.
அவற்றில் 7 வாகனங்களின் உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆயர் கெரோ அருகே கிலோமீட்டர் 228-ல் நடந்த இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள வாகனங்கள், சாலைப் போக்குவரத்து சட்டம் 1957, பிரிவு 53-ன் கீழ் விசாரணை செய்யப்படும் என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2,000 ரிங்கிட் அபராதமோ அல்லது 6 மாதங்கள் சிறைத் தண்டனையோ வழங்கப்படும் என்றும் ஜேபிஜே அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த டத்தோ வி.வள்ளுவன் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தால், சாலையில் விபத்திற்குள்ளாகிக் கிடந்த இரு வாகனமோட்டிகளை அடைய அவசர ஊர்திக்கு 1 மணி எடுத்துக் கொண்டதாகவும், அவசர ஊர்தி அங்கு சென்றடைவதற்குள் அந்த இரு மோட்டார் ஓட்டிகளும் இறந்துவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.