சென்னை – மேற்கு வங்க முதல்வராக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி இன்று பதவியேற்கிறார். மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில், மொத்தம் உள்ள 294 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 211 இடங்களை பிடித்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
புதிய அரசின் பதவியேற்பு இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க முக்கிய தலைவர்களுக்கு மம்தா அழைப்பு விடுத்துள்ளார்.
மேற்கு வங்காள முதல்வராக இன்று பதவி ஏற்கும் மம்தா பானர்ஜியை வாழ்த்தி முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து மேற்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–
மேற்கு வங்காள முதல்வராக நீங்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக எனக்கு தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்ததற்கு நன்றி.
நீங்கள் தொடர்ச்சியாக இரண்டாம் முறையும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருப்பது கொண்டாடப்படக்கூடிய சாதனையாகும். அந்த கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு, உங்களை நேரில் தனிப்பட்ட முறையில் சந்தித்து நல்வாழ்த்து கூறவேண்டும் என்றுதான் விரும்புகிறேன்.
ஆனாலும் அப்படி செய்யமுடியவில்லை. ஏனென்றால், அலுவலகப் பணியால் எனக்கு ஏற்பட்டுள்ள நிர்ப்பந்தம்தான். மாநிலத்தை மேம்பாட்டை நோக்கி பயணிக்கச் செய்த உங்களுக்கும், உங்கள் அமைச்சரவைக்கும் மேலும் மேலும் வெற்றிகள் கிடைக்க வாழ்த்துகிறேன் என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்..