Home Featured கலையுலகம் ‘கங்கையில் சமாதி ஆகிறேன்’ – வேந்தர் மூவிஸ் மதன் கடிதத்தால் பரபரப்பு!

‘கங்கையில் சமாதி ஆகிறேன்’ – வேந்தர் மூவிஸ் மதன் கடிதத்தால் பரபரப்பு!

837
0
SHARE
Ad

vendhar-movies-s-madhanசென்னை – வேந்தர் மூவீஸ் பட அதிபர் மதன், தற்கொலை செய்து கொள்வதாக எழுதி வைத்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. வேந்தர் மூவீஸ் பட அதிபர் மதன். இந்நிறுவனம் சினிமா தயாரித்ததோடு, வினியோகத்திலும் ஈடுபட்டது.

இந்த நிறுவனம், நடிகர் ஆதி நடித்த, ‘அரவான்’ படத்தை முதலில் வெளியிட்டது. பின், ஐந்து படங்களுக்கு மேல் தயாரித்தும், 20 படங்களுக்கு மேல் வினியோகித்தும் உள்ளது.

இதுதவிர, பிரபல கல்வி நிறுவன அதிபரும், ஐ.ஜே.கே., கட்சித் தலைவருமான பச்சமுத்துக்கு நெருக்கமாக இருந்தார். எஸ்.ஆர்.எம்., பல்கலையின் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பல விஷயங்களில், பச்சமுத்துக்கு வலது கரமாக மதன் செயல்பட்டு வந்தார்.

#TamilSchoolmychoice

சமீபத்தில் மதனுக்கும், பச்சமுத்துக்கும் ஏற்பட்ட விரிசலைத் தொடர்ந்து, மதன், ‘காசி சென்று கங்கையில் சமாதி அடையப் போகிறேன்’ என, கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகி விட்டார்.

இக்கடிதம், சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடிதம் குறித்த உண்மையை அறியும் முயற்சியில், தமிழ் திரையுலகினரும், போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்.

மதன் எழுதி வைத்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: என் நண்பர்களுக்கும், வேந்தருக்கும் மற்றும் என் குடும்பத்தாருக்கும்… ஒரு ஜீரோவில் தொடங்கி, ஒரு ஜீரோவில் முடிகிறது என் வாழ்க்கை.

கடைசியில் என்ன ஒரு நிம்மதி, காசியில் கங்கையில் சமாதி அடைகிறேன். காசி விஸ்வநாதர் இருக்கும் இடத்தில் மரணமடைந்தால், அடுத்த ஜென்மம் இல்லை; எனக்கு, அடுத்த ஜென்மமே வேண்டாம். எந்த ஒரு ஆசையும் இல்லாமல் செல்கிறேன்.

என்னிடம், மாணவர் சேர்க்கைக்காக பணம் தந்தவர்களும், என்னை நம்பி சினிமாவில் முதலீடு செய்தவர்களும் பயப்பட வேண்டாம்; பணம் பத்திரமாக உள்ளது.

என் வாழ்வில், எனக்கு தெரிந்த ஒரே மந்திரம் – வேந்தர். எனக்கு ஒரு பெயரை கொடுத்து, என்னை இந்த உலகுக்கு காட்டியவர் அவரே. என் தலைவருக்காக வாழ்ந்தேன்; தலைவனாலேயே போகிறேன்.

எஸ்.ஆர்.எம்., நிறுவனம், முதலில் வர வேண்டும் என பாடுபட்டேன். மாணவர்கள் கல்லுாரியில் செலுத்தும் பணம் குறைவாக இருந்தாலும், கல்லுாரிக்கு போகும் பணம் நிறைவாக இருக்கும்; இதெல்லாம் எப்படி? என் தலைவனிடம் பேர் வாங்க வேண்டும் என்பது தான்.

தலைவர் எப்போதும் என்னை கூட வைத்து கொள்ள வேண்டும் என்று வெறி. நீங்கள் நம்பாமல் இருக்கலாம். கல்லுாரியில் சேர மாணவர்கள் காத்திருக்கிறார்கள். எல்லாம் நான் பட்ட உழைப்பு.

கட்சி தொடங்கி முதல் மாநாட்டில், வெளி மாநில மாணவர்கள், 100 பேருந்துகளில் வந்து பங்கேற்றனர். பீகார் தேர்தல், 14 தொகுதியில், ஐ.ஜே.கே., நின்றது. கட்சிக்கான அனைத்து செலவையும் செய்தது நான் தான்; பொய் சொல்லவில்லை.

என்னையும், அய்யாவையும் சிலர் பிரிக்க நினைக்கின்றனர். சொத்தை, என் பெயரில் எழுதி வைத்து விடுவார் என, பில்லி சூனியம் வரையில் சென்று விட்டனர். எனக்கு அதை பற்றி கவலையில்லை.

ஆனால், கடந்த ஆறு மாதமாக, வேந்தர் அய்யா என்னிடம் பேசுவது இல்லை; தேர்தல் பணிக்கும் அழைக்கவில்லை. அதனால், இந்த முடிவுக்கு செல்கிறேன். இது புதிது இல்லை. நவம்பர் 30-ஆம் தேதியும் முயற்சித்தேன்; முடியவில்லை.

கடைசியாக நான் கேட்பது என்னவென்றால், நான் அனுப்பிய பட்டியல் படியே மாணவர்களை கல்லுாரியில் சேர்க்க வேண்டும். அவர்களிடம் வாங்கி பணம் முழுமையாக தரப்பட்டுள்ளது. வேந்தர் மூவீஸ் மேல் எந்த கடனும் வரக்கூடாது.

இதையும் மீறி என் நண்பர்களையோ, என் குடும்பத்தினரையோ தொந்தரவு செய்தால் உங்களை கடவுள் மன்னிக்க மாட்டார். அய்யா, நான் உங்களை பார்க்காமல் போகிறேன். என் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.