சென்னை – நேற்று மாலையிலிருந்தே கோடம்பாக்கத்தில் பரபரப்பைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது நடிகர் சூர்யா காற்பந்தாட்ட இளைஞனை அடித்ததாக வெளியான செய்தி.
சாலையில் பெண் ஒருவரின் கார் மீது மோதி சேதம் செய்த இளைஞர்கள், அந்தப் பெண்ணிடம் தகராறு செய்து கொண்டிருந்தாகவும், அவர்களில் ஒருவரை (கால்பந்தாட்ட வீரராம்) அந்த வழியாகச் சென்ற நடிகர் சூர்யா அடித்துவிட்டார் என காற்பந்தாட்ட இளைஞர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
‘இந்த செய்தியின் உண்மைத் தன்மை என்ன? சூர்யா என்ற பிரபலம் நடு சாலையில் ஒருவரை அடித்தால் அதை யாரும் பார்த்திருக்க மாட்டார்களா? அப்படி ஒருவர் கூட இதுவரை கூறவில்லை.
அந்த இளைஞர் கொடுத்த புகாரிலும் சாட்சியம் ஏதுமில்லை’, என்கிறார்கள் திரைத்துறையினர். இந்த புகார் தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. புகாரைப் பெற்றுக் கொண்டதற்கான ரசீதைத்தான் போலீசார் வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து சூர்யா தரப்பில் விசாரித்தபோது, “அடையாறு பாலம் அருகே ஒரு வயதான பெண்மணியிடம் இரு வாலிபர்கள் தகராறு செய்துகொண்டிருந்ததை அவ்வழியே சென்ற சூர்யா பார்த்தார். அந்த இளைஞர்கள் மிக மோசமாக நடந்து கொள்வதைப் பார்த்து, உடனே காரை நிறுத்தி அவர்களிடம் விசாரித்தார்.
இளைஞர்கள் தொடர்ந்து தகராறு செய்ததால் காவல்துறையிடம் தகவல் தெரிவித்தார். அவர் யாரையுமே அடிக்கவில்லை. தனது உதவியாளர்களை அந்தப் பெண்மணிக்குப் பாதுகாப்பாக இருக்கச் சொல்லிவிட்டு கிளம்பி விட்டாராம்.
சூர்யா இல்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவருக்கு எதிராக அந்த இளைஞர்கள் புகார் அளித்துள்ளார்கள். அது பொய்யான புகார்,” என சூர்யா தரப்பினர்கள் கூறியுள்ளார்கள்.