கோலாலம்பூர் – தமிழகத் தேர்தல்கள் முடிந்ததும், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினரோடு ஓய்வெடுக்க மலேசியா புறப்பட்டுச் சென்றார் எனத் தமிழகத் தகவல் ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன. அது குறித்து நமது செல்லியலிலும் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்ததோடு, கோலாலம்பூரில் ஸ்டாலின் எங்கு தங்கி ஓய்வெடுக்கப் போகின்றார் என்ற ஆரூடங்களையும் வெளியிட்டிருந்தோம்.
அதற்கேற்ப, நாம் விசாரித்தபோது ஒருவர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசி படம் எடுத்துக் கொண்டுள்ளார் என்று கூறிய செல்லியல் வாசகர் ஒருவர், ஸ்டாலினைச் சந்தித்தவரின் தொடர்பு எண்ணையும் நமக்குப் பெற்றுத் தந்தார்.
ஸ்டாலினைச் சந்தித்தவர் அல்தாஃப் பாட்ஷா. தமிழகத்தைச் சேர்ந்த இவர் பெல்மோண்ட் டெக்னோலோஜிஸ் (Belmont Technologies) என்ற நிறுவனத்தில் உயர்நிலை அதிகாரியாக மலேசியாவில் பணியாற்றி வருகின்றார்.
அவரைத் தொடர்பு கொண்டபோது, ஸ்டாலினையும், அவரது குடும்பத்தினரையும் தலைநகர் மிட்வேலி வணிக வளாகத்தில் எதிர்பாராத விதமாகச் சந்தித்த அனுபவத்தை பெருமிதத்தோடும், உற்சாகத்தோடும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
மிட் வேலியில் நடந்த எதிர்பாராத சந்திப்பு
துர்கா ஸ்டாலினின் பணிவும் கவர்ந்தது
ஸ்டாலினோடு, அவரது குடும்பத்தினரையும், அவரது பேரக் குழந்தைகளையும், மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினையும் சந்தித்ததாகவும் அல்தாஃப் கூறினார்.
“ஸ்டாலின் குடும்பத்தில் என்னைக் கவர்ந்த மற்றொரு அம்சம், ஸ்டாலினின் மனைவி துர்கா அம்மையாரின் பணிவான பேச்சும், அன்பான பழக்கவழக்கமும்தான். நீண்ட நாட்களாக எங்களைத் தெரிந்தவர்போல் பேசினார். தமிழக அரசியல்வாதிகளின் மனைவியர் போல் மிதப்பு எதுவும் இல்லாமல், போலித்தனம் எதுவும் இல்லாமல், இயல்பாகவும், எளிமையாகவும் அவர் எங்களிடம் நடந்து கொண்டது அவர் மீதான மதிப்பை பன்மடங்கு கூட்டி விட்டது”
இப்படி சொல்லிக் கொண்டே போன அல்தாஃப் மற்றொரு தகவலையும் நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.
“ஸ்டாலின் நினைத்திருந்தால் அவருக்கிருக்கும் வசதிக்கு, கோலாலம்பூரில் இருக்கும் மிகவும் உயர்தரமான தங்கும் விடுதிகளில் யார் கண்ணிலும் படாமல் தங்கியிருக்க முடியும். ஆனால், அவர் கோலாலம்பூர் ராஜா சூலான் சாலையில் உள்ள இஸ்தானா ஹோட்டல் என்ற நடுத்தர தங்கும் விடுதியில் குடும்பத்தினரோடு தங்கியதோடு, அங்கு சுற்றியிருந்த பல இந்திய உணவகங்களும் சென்றிருக்கின்றார். அங்கிருந்த மலேசியர்கள், தமிழ் நாட்டிலிருந்து வந்து உணவகங்களில் பணியாற்றும் தமிழக ஊழியர்கள் என அனைவரோடும், கொஞ்சமும் முகம் சுளிக்காமல், அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டு அவர்களை மகிழ்வித்திருக்கின்றார் ஸ்டாலின்” என்றார் அல்தாஃப்.
“இன்றைய நவீனயுக தமிழகத்திற்கு இதுபோன்ற தலைவர்கள்தான் நமக்குத் தேவை” என்ற தனது உள்மன ஆசையையும் வெளிப்படுத்தினார் அல்தாஃப்.
எதிர்வரும், ஜூன் 3ஆம் தேதி, கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் என்பதால், அதற்கு முன்பாக ஸ்டாலின் குடும்பத்தினரோடு நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
-இரா.முத்தரசன்