பாங்காக் – தாய்லாந்தில் உள்ள புலிக் கோயிலில் இன்று அதிரடியாகச் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் அங்கு உறை நிலையில் வைக்கப்பட்டிருந்த 40 புலிக்குட்டிகளின் உடல்களைக் கைப்பற்றியுள்ளனர்.
அக்கோயிலில் இருந்த சமயற்கட்டில் இருந்த உறைவிப்பானில் ( freezer) இருந்து இந்த 40 புலிக்குட்டிகளின் உடல்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேசிய வனவிலங்கு பூங்கா துறையின் துணை இயக்குநர் அடிசோர்ன் நுச்டாம்ரோங் தெரிவித்துள்ளார்.
காஞ்சனாபூரி என்ற இடத்தில் அமைந்துள்ள அந்த புத்த ஆலயம், சுற்றுலாப் பயணிகள் பலர் வரும் இடமாகும். அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அங்கு வளர்க்கப்பட்டு வரும் புலிகளோடு புகைப்படம் எடுப்பது வாடிக்கை.
இந்நிலையில், அக்கோயிலில் புலிகள் கடத்தப்படுவதாகவும், வதைக்கப்படுவதாகவும் அனைத்துலக அளவில் எழுந்த புகார்களை அடுத்து, கடந்த திங்கட்கிழமை அங்கு சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், 52 புலிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.
என்றாலும், இன்னும் 85 புலிகள் அங்கிருப்பதாகக் கூறப்படுகின்றது.
சீன பாரம்பரிய மருத்துவத்திதில் புலியின் உடல் பாகங்கள் மருத்துவமாகப் பயன்படுத்தப்பட்டு வருவதால், புலிகள் கடத்தப்படுவதாகவும் நம்பப்படுகின்றது.