Home Featured கலையுலகம் இளைஞரைத் தாக்கிய விவகாரம்: நடிகர் சூர்யா மீதான புகார் வாபஸ்!

இளைஞரைத் தாக்கிய விவகாரம்: நடிகர் சூர்யா மீதான புகார் வாபஸ்!

701
0
SHARE
Ad

surya1சென்னை  – சென்னை அடையாறில் கால்பந்தாட்ட வீரரை தாக்கியதாக நடிகர் சூர்யா மீது புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அந்தப் புகார் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

சென்னை பாரிமுனை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (21). கால்பந்தாட்ட வீரரான இவர், தனது மோட்டார் சைக்கிளில் பயிற்சிக்காக அடையாறில் உள்ள ஒரு கல்லூரி மைதானத்துக்குச் செல்வதற்காக புறப்பட்டுச் சென்றார்.

அவர் அடையாறு திரு.வி.க. பாலம் அருகே செல்லும்போது, முன்னால் சென்ற கார் திடீரென நின்றது. இதை சற்றும் எதிர்பாராத பிரேம்குமார், மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றார்.

#TamilSchoolmychoice

ஆனால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, அந்த காரின் மீது மோதியது. இந்த விபத்தில் காரின் பின்பகுதியிலும், மோட்டார் சைக்கிளின் முன்பகுதியிலும் லேசான சேதம் ஏற்பட்டது.

இதைப் பார்த்த அந்த காரை ஓட்டி வந்த பெண், பிரேம்குமாரிடம் கார் சேதமடைந்தது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். பிரேம்குமாரும், அந்தப் பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம்.

இருவரும் சாலையின் நடுவில் நின்று கொண்டு பிரச்சினை செய்ததால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு, மக்கள் கூட்டம் கூடியது.

அந்த வேளையில் அங்கு காரில் வந்த நடிகர் சூர்யா, இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. இதில் பிரேம்குமாருக்கும், சூர்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.

இந்தச் சூழ்நிலையில்தான் பிரேம்குமார், சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்: அடையாறு திரு.வி.க.பாலம் அருகே நடந்த பிரச்சினையில் நடிகர் சூர்யாவுக்கும், தனக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதில் அவர் தன்னை தாக்கியதாகவும், சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் குறிப்பிட்டிருந்தார்.

சூர்யா தரப்பு இச்சம்பவம் குறித்து கூறும்போது: அடையாறு பாலம் அருகே ஒரு வயதான பெண்மணியிடம் இரு வாலிபர்கள் தகராறு செய்துகொண்டிருந்ததை அவ்வழியே சென்ற சூர்யா காணநேர்ந்தது. உடனே காரை நிறுத்தி அவர்களிடம் இதுபற்றி விசாரித்துள்ளார். பிறகு காவல்துறையிடம் தகவல் தெரிவித்தார்.

பிறகு, தனது உதவியாளர்களை அந்தப் பெண்மணிக்குப் பாதுகாப்பாக இருக்கச் சொல்லிவிட்டு கிளம்பினார். சூர்யா இல்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவருக்கு எதிராக அந்த இளைஞர்கள் புகார் அளித்துள்ளார்கள் என்று கூறினார்கள்.

பிரேம்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் சமுதாயப் பணி பதிவேடு என்ற சிஎஸ்ஆர் ரசீது அவரிடம் வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை காவல்துறையினரிடம் தான் அளித்த புகாரை பிரேம் குமார் வாபஸ் பெற்றுக்கொண்டார்.

சூர்யாவின் வழக்கறிஞரும் பிரேம்குமார் குடும்பத்தினரும் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் இரு தரப்பினர் இடையேயும் சுமூக உடன்பாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இதனையடுத்து தான் அளித்த புகாரை வாபஸ் பெறுவதாக பிரேம்குமார் காவல்துறைக்குக் கடிதம் மூலமாகத் தெரிவித்துள்ளார்.