மதுரை – தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என அதன் ஒருங்கிணைப்பாளரும் மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ கூறினார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மதிமுக, தேமுதிக, தமாகா, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
இதில், மதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் தோல்வியை சந்தித்தது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிட்ட உளுந்தூர்பேட்டை தொகுதியில் டெபாசிட் இழந்தார்.
இந்த கூட்டணியில் திருமாவளவன் உட்பட ஒரு சில வேட்பாளர்கள் தங்களது சொந்த செல்வாக்கில் டெபாசிட் பெற்றனர். மதிமுக போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் டெபாசிட் கூட பெற முடியாத நிலை ஏற்பட்டது.
அதேபோல் தமாகா போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் டெபாசிட் இழந்தது. இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, சட்டமன்றத் தேர்தலில் அமைந்த தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா கூட்டணி வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என்றார்.
மேலும், ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும். வாக்காளர்களுக்கு பணம் வழங்கிய வேட்பாளர்களை 6 ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.