Home Featured நாடு மாமன்னர் பிறந்த நாள்: விருதுகள் பெறும் மலேசியப் பிரமுகர்கள்! அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் முதலிடம்!

மாமன்னர் பிறந்த நாள்: விருதுகள் பெறும் மலேசியப் பிரமுகர்கள்! அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் முதலிடம்!

1182
0
SHARE
Ad

Mohamed Apandi Ali-AGகோலாலம்பூர் – இன்று சனிக்கிழமை மாமன்னரின் பிறந்த நாளை முன்னிட்டு விருதுகள் பெறுவோர் பட்டியலில் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் முகமட் அபாண்டி முதலிடம் வகிக்கின்றார். முதல் நிலை டான்ஸ்ரீ விருதான ‘பி.எம்.என்’ (PMN) என்ற விருதைப் பெறும் ஒரே பிரமுகராக அவர் திகழ்கின்றார்.

சில இந்தியப் பிரமுகர்களும் நாட்டின் உயரிய விருதுகளைப் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாமன்னர் பிறந்த நாளில் விருதுகள் பெறும் சில முக்கிய மலேசியப் பிரமுகர்கள் பின்வருமாறு:

டான்ஸ்ரீ என்ற கௌரவம் கொண்ட பிஎஸ்எம் விருதுகள் பெறுபவர்கள்:

  • டான் கூன் சுவான் – மசீசவின் முன்னாள் தலைவர் டான் கூன் சுவான் மலேசிய சீனர்களின் அரசியல் வரலாற்றில் முக்கிய இடம் வகிப்பவர். சாதாரணக் குடும்பத்தில் செந்தூல் வட்டாரத்தில் பிறந்து வளர்ந்த இவர் பின்னர் வணிகத்தில் ஈடுபட்டு, மலேசியப் பங்கு சந்தையில் மிகப் பெரிய, கவனிக்கத்தக்க இடத்தைப் பிடித்தார். பின்னர், மசீச அரசியல் போராட்டத்தில் நியோ யீ பான் என்பவரை வீழ்த்தி மசீச தேசியத் தலைவரானார். பங்கு விற்பனை முறைகேடுகள் காரணமாக, பதவியிழந்த அவர் சிங்கப்பூரில் சில மாதங்கள் சிறைவாசமும் அனுபவித்தார்.
  • டத்தோஸ்ரீ ஜமாலுடின் இப்ராகிம் – செல்கோம் (Celcom) எனப்படும் நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனத்தைக் கொண்டுள்ள அக்சியாத்தா குழுமத்தின் தலைவராகவும், தலைமைச் செயல் அதிகாரியாகவும் செயல்பட்டு வருபவர் ஜமாலுடின் இப்ராகிம்.
  • டத்தோஸ்ரீ நூர் ரஷிட் இப்ராகிம் – மலேசியக் காவல் துறையின் துணைத் தலைவர் (டெபுடி ஐஜிபி) டத்தோஸ்ரீ நூர் ரஷிட் இப்ராகிமும் டான்ஸ்ரீ விருதைப் பெறுகின்றார்.
  • டத்தோஸ்ரீ அப்துல் வாஹிட் ஓமார் – பிரதமர் துறை அமைச்சராகப் பதவி விலகிச் செல்லும் டத்தோஸ்ரீ அப்துல் வாஹிட் ஓமார் டான்ஸ்ரீ விருது பெறும் மற்றொரு பிரமுகராவார்.Sharizat 08 March
  • டத்தோஸ்ரீ ஷாரிசாட் அப்துல் ஜாலில் – முன்னாள் அமைச்சரும், அம்னோ மகளிர் பகுதித் தலைவியுமான டத்தோஸ்ரீ ஷாரிசாட் அப்துல் ஜாலில் டான்ஸ்ரீ விருது பெறுகிறார். அரசாங்கத்தின் மகளிர் பொருளாதாரத் திட்டங்களுக்கான ஆலோசகராகவும் ஷாரிசாட் பணியாற்றி வருகின்றார்.
  • டத்தோஸ்ரீ நோ ஓமார் – சிலாங்கூர் மாநில அம்னோ பொறுப்பாளரான டத்தோஸ்ரீ நோ ஓமாரும் டான்ஸ்ரீ விருது பெறுகின்றார். இவர் சிலாங்கூர் மாநிலத்திற்கான மத்திய அரசாங்கத்தின் ஆலோசகருமாவார்.
  • நோரியா காஸ்னோன் – சரவாக்கில் கடந்த மே 5ஆம் தேதி நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் அகால மரணமடைந்த சுங்கை பெசார் நாடாளுமன்ற உறுப்பினரும் தோட்டப்புற, மூலத் தொழில் துறை அமைச்சருமான நோரியா காஸ்னோனுக்கு, மரணத்துக்குப் பின்னர் வழங்கப்படும் டான்ஸ்ரீ விருது வழங்கப்படுகின்றது.
  • டத்தோ வான் முகமட் கைரில் அனுவார் வான் அகமட் – சரவாக் ஹெலிகாப்டர் விபத்தில் காலமான மற்றொரு பிரமுகரான கோலகங்சார் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ வான் முகமட் கைரில் அனுவார் வான் அகமட்டுக்கும் மரணத்துக்குப் பின்னர் வழங்கப்படும் டான்ஸ்ரீ விருது வழங்கப்பட்டிருக்கின்றது.
  • அகமட் சோப்ரி ஹாருண் – சரவாக் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த  துணையமைச்சர் நோரியா காஸ்னோனின் மெய்க்காப்பாளரான அகமட் சோப்ரி ஹாருண் பிபிஎன் விருது பெறும் 596 பிரமுகர்களில் ஒருவராவார். இவருக்கு மரணத்துக்குப் பின்னர் வழங்கப்படும் பிபிஎன் விருது வழங்கப்படுகின்றது.