கோலாலம்பூர் – இன்று சனிக்கிழமை மாமன்னர் பிறந்த நாளை முன்னிட்டு மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ச.சாமிவேலு “துன்” விருது பெறும் வேளையில், பல்வேறு இந்தியப் பிரமுகர்கள் டான்ஸ்ரீ மற்றும் டத்தோ விருதுகள் பெறுகின்றனர்.
துன் சம்பந்தனுக்குப் பிறகு இந்தியத் தலைவர் ஒருவர் துன் விருது பெறும் வரலாற்றுபூர்வ நிகழ்வு, இந்த ஆண்டுக்கான மாமன்னர் பிறந்த நாளில் நிகழ்ந்துள்ளது என்பதோடு, இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே ஆண்டில் ஆறு இந்தியர்கள் டான்ஸ்ரீ விருதுகள் பெறுகின்றனர்.
- “டான்ஸ்ரீ” எஸ்.ஏ.விக்னேஸ்வரன்
மஇகாவின் தேசிய உதவித் தலைவரும், மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான டத்தோஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் (படம்) நாட்டின் இரண்டாவது உயரிய விருதாகக் கருதப்படும் ‘டான்ஸ்ரீ’ விருதைப் பெறுகிறார்.
- “டான்ஸ்ரீ” ஜி.ராஜூ (பேராக்)
மஇகாவின் பேராக் அரசியலில் நீண்ட காலமாக பின்னிப் பிணைந்த அரசியல், பொது வாழ்க்கைப் பின்புலத்தைக் கொண்ட டத்தோ ஜி.ராஜூ பேராக் மாநிலத்தில் செயலாளராகவும், மாநிலத் தலைவராகவும் நீண்ட காலம் பணியாற்றியவர்.
பேராக் மாநில சட்டமன்ற உறுப்பினராகவும், ஆட்சிக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர்.
- “டான்ஸ்ரீ” ரமேஷ் (பெலித்தா உணவக உரிமையாளர்)
நாட்டின் பல பகுதிகளிலும், தமிழகத்தின் சென்னையிலும் கிளைகளைக் கொண்டுள்ள ‘பெலித்தா’ (Pelita) உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் உரிமையாளரான ரமேஷ் டான்ஸ்ரீ விருதைப் பெறும் மற்றொரு இந்தியப் பிரமுகராவார்.
- “டான்ஸ்ரீ” குணா சிற்றம்பலம்
பொறியியல் வல்லுநரும், நாட்டின் முன்னணி பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனமாக எச்.எஸ்.எஸ் என்ஜினியரிங் (HSS ENGINEERING) நிறுவனத்தின் பங்குதாரருமான டத்தோ குணா சிற்றம்பலம் “டான்ஸ்ரீ” விருது பெறுகிறார்.
- “டான்ஸ்ரீ’ ஜோசப் அடைக்கலம்
பைனரி பல்கலைக் கழக நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பேராசிரியர் டத்தோ ஜோசப் அடைக்கலம் டான்ஸ்ரீ விருது பெறுகிறார். நீண்டகாலமாக கல்வித் துறையில் சேவையாற்றி வரும் இவர், பல இந்திய மாணவர்களுக்கு உபகாரச் சம்பளங்கள், வழங்கி அவர்களை கல்வித் துறையில் முன்னேற்றியிருக்கிறார்.
- “டான்ஸ்ரீ” எஸ்.செல்வராஜூ
வணிகப் பிரமுகரும், இஸ்வராபெனா சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் (iswarabena Sdn Bhd) நிர்வாக இயக்குநருமான டத்தோஸ்ரீ எஸ்.செல்வராஜூ டான்ஸ்ரீ விருது பெறும் பிரமுகர்களில் ஒருவராவார்.