கோலாலம்பூர் – ‘பொன்மனச் செம்மல்’ – ‘புரட்சித் தலைவர்’ டாக்டர் எம்ஜிஆர் அவதரித்து நூறாண்டுகள் பூர்த்தியடைந்துவிட்டது. இப்பெருமகனார் மறைந்து 30 ஆண்டுகள் கடந்த போதிலும், பெருமக்களின் மனங்களில் இன்னும் நீக்கமற வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
சீர்மிகு வாழ்க்கை நெறிமுறைகளுக்கு ஓர் உதாரணப் புருஷராக வாழ்ந்துக் காட்டியவரை, புதிய தலைமுறையினரும் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கோடு ‘எம்ஜிஆர் அனைத்துலக மாநாடு & நூற்றாண்டு விழா’ கோலாலம்பூரில் நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில், இவ்விழாவையொட்டி, மலேசியாவில் எம்ஜிஆர் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடும் நிகழ்ச்சி டான்ஸ்ரீ சோமா அரங்கில் நேற்று முன்தினம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
எம்ஜிஆர் முகம் பொறிக்கப்பட்ட அஞ்சல் தலையை, மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ், கிம்மா தேசியத் தலைவர் டத்தோ சையட் இப்ராகிம், டத்தோ கீதாஞ்சலி ஜி ஆகியோர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.