பத்தாங் காலி – ‘நான் நேசிக்கும் உலுசிலாங்கூர்’ என்ற தமிழ் இதழின் வெளியீட்டு விழா, கடந்த வியாழக்கிழமை மாலை, பண்டார் பாரு பத்தாங் காலி டத்தோ அப்துல் ஹமீத் அரங்கில் நடைபெற்றது.
இவ்வெளியீட்டு விழாவிற்கு, கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியாங் தலைமை வகித்ததோடு, உலு சிலாங்கூர் இந்தியர்களின் பல்வேறு விவகாரங்கள் குறித்த கலந்துரையாடலிலும் பங்கேற்றார்.
இக்கலந்துரையாடலில் உலு சிலாங்கூர் வட்டாரத்தைச் சேர்ந்த இந்திய சமுதாய அமைப்புகள் மற்றும் அரசு சாரா இயக்கங்களைச் சேர்ந்த சுமார் 100 தலைவர்கள் கலந்து கொண்டனர்.
உலு சிலாங்கூர் வட்டாரத்தைச் சேர்ந்த இந்திய மக்களின் பல்வேறு நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்த கட்டுரைகள், ‘நான் நேசிக்கும் உலுசிலாங்கூர்’ என்ற இதழில் தமிழில் வெளிவரவிருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 13-வது தேர்தலில், கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதியில், ஜசெக சார்பில் போட்டியிட்ட லீ கீ ஹியாங், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய முன்னணி வேட்பாளர் ஜெஸ்சி உய்யை 1,702 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.
கோல குபு பாரு வட்டாரத்தில் பல்வேறு ஆக்கப்பூர்வமானப் பணிகளை செய்து வரும் லீ கீ ஹியாங், தனது தொகுதி மக்களிடையே நன்மதிப்பினைப் பெற்று சிறந்த தலைவராக விளங்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.