Home Featured நாடு அமெரிக்காவில் நடந்த புலம் பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு: முல்லை இராமையாவின் ‘ஒலிவழி’ தமிழ் கற்றல்...

அமெரிக்காவில் நடந்த புலம் பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு: முல்லை இராமையாவின் ‘ஒலிவழி’ தமிழ் கற்றல் வழிமுறைகள்!

5919
0
SHARE
Ad

அமெரிக்காவின் சாந்தா கிளாரா நகரில் மே 27 முதல் மே 30 வரை நடைபெற்று முடிந்த புலம் பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாட்டில் பல மலேசியப் பேராளர்கள் கலந்து கொண்டு, சிறப்பான முறையில் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

மலேசியாவைப் பிரதிநிதித்து கலந்து கொண்ட குழுவில் இடம் பெற்ற கல்வியல் நிபுணரும், பயிற்சியாளரும் பேராசிரியருமான முனைவர் முல்லை இராமையா படைத்த ஒலிவழி தமிழ் கற்றல் பயிற்சிக் கருத்தரங்கம் மாநாட்டில் கலந்து கொண்ட பேராளர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி பலத்த வரவேற்பையும் பெற்றது.

mullai ramaiah
அமெரிக்காவில் நடைபெற்ற புலம் பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாட்டின் போது கட்டுரை சமர்ப்பித்த முனைவர் முல்லை இராமையா…

தொடக்க நிலை மாணவர்கள், கற்றல் குறைபாடு கொண்டவர்கள் (டிஸ்லெக்சியா), தாமதமாகக் கற்கும் பிரிவினர் போன்றவர்கள் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்ட முல்லை இராமையா மலாயாப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியவராவார்.

#TamilSchoolmychoice

தனது ஆராய்ச்சியின் மூலம் சொல் ஒலி மூலம் எளிதாகத் தமிழ் கற்கும் வழிமுறைகளைக் கண்டறிந்து அதனை மாநாடுகளிலும், பயிற்சிக் கருத்தரங்குகளிலும் வெளிப்படுத்தி வருகின்றார் முல்லை இராமையா. அந்த வரிசையில்தான் அமெரிக்காவில் நடைபெற்ற புலம் பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாட்டிலும் தனது கட்டுரையைப் படைத்து பயிற்சிக் கருத்தரங்கம் (Workshop) ஒன்றையும் நடத்தினார் அவர்.

முனைவர் முல்லை இராமையா புலம் பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாட்டில் படைத்த ஒலிவழிக் கற்பித்தல் ஆய்வுக் கட்டுரை குறித்த சில சிறப்பு அம்சங்களை சுருக்கமாக இங்கே வழங்குகின்றோம்.

ஒலிவழி கற்பித்தல்

OLYMPUS DIGITAL CAMERAஅமெரிக்காவில் நடைபெற்ற புலம் பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாட்டில் முல்லை இராமையா படைத்த கட்டுரையைச் செவிமெடுக்கக் குழுமியிருந்த பேராளர்களில் ஒரு பிரிவினர்…

ஒரு மொழியின் அடிப்படைக் கூறான ஒலிகளை நேரடியாகக் கற்பதன் மூலம் அந்த மொழியை ஒருவரால் அதனை நன்கு உள்வாங்கிக் கொள்ள முடியும் என்ற கோட்பாட்டைக் கொண்டது அந்த ஆய்வுத் திட்டம்.

ஒலிவழி கற்றலின் பயன்கள்:

  • ஒலியைத் திட்டவட்டமாக அறிதல்
  • உச்சரிப்பு மேம்படுதல்
  • ஒலிக்குரிய படத்துடன் எழுத்தைச் சேர்த்துப் பார்த்து நினைவில் நிறுத்தல்
  • ஒலியின்/எழுத்தின் வடிவத்தை நன்கு அறிந்து எழுதுதல்
  • எளிதாக ஒரு சொல்லைப் பிரித்து சேர்த்து வாசித்தல்
  • கேட்கும் திறனும் பேசும் திறனும் மேம்படுதல்

முதல் முறையாக ஒரு மொழியைக் கற்கும்போது மாணவர்களுக்கு ஏற்படும் அடிப்படைப் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்தக் கற்பித்தல் முறை, பிள்ளைகளின் வளர்ச்சி நிலைகளையும் கல்விக் கோட்பாடுகளையும் தமிழ் மொழிக்கான பிரத்தியேகத் தன்மைகளையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது.

இந்த முறையின் மூலம் ஒலிகளைக் கற்பிப்பதற்கான மின் அட்டைகள், படத்தோடு சொல்லின் ஒலியைக் கற்பிக்கும். ஓர் எழுத்தை ஒரு படத்தோடும் எழுத்தோடும் இணைத்துப் பார்த்துக் கேட்டு, அனுபவ வழி கற்கும் போது அது நினைவில் நிற்கும். மின் அட்டைகள் மின்னல் வேகத்தில் பல முறை காட்டப்பட வேண்டியவை. அந்த வேகத்தில் ஒலிகளையும், அதன் வடிவத்தையும் இணைந்த படத்தையும் மூளை படம் பிடித்து நெறிப்படுத்தி நீண்ட கால நினைவுக்குள் சேர்த்து விடுகின்றது.

Tamil International Academy Conferenceகற்றுக் கொண்ட ஒலிகளையும் அதற்குரிய குறிப்புச் சொல் கொண்ட பட அட்டைகளையும் மாணவர்களே இணைக்கும் போது மீண்டும் ஓர் அனுபவ வழி கற்கும் நடவடிக்கை நடைபெறுகின்றது. மேற்கொண்டு படங்களும் அதன் பெயர்களும் சொல் வளத்தை உருவாக்குகின்றன.

ஒலிகளைக் கற்றுக் கொண்ட பின் ஓர் ஒலியோடு மற்றொரு ஒலியைச் சேர்த்து அசை ஆக்குவது பிள்ளைகளுக்கு பிரத்தியேகமாக கற்பிக்க வேண்டிய அம்சம். அசைகளைக் கொண்ட மின் அட்டைகள் பார்த்த மாத்திரத்தில் ஓர் அசையை ஓர் ஒலியாகப் பார்க்கவும் வாசிக்கவும் சொல்லிக் கொடுக்கும். ஒவ்வொரு அசைக்கும் ஒரு சொல்லுண்டு. இச் சொற்கள் மேலும் சொல்வளத்தை உண்டாக்கும்.

தமிழில் ஓர் அசைச் சொற்கள் உண்டு. எடுத்துக் காட்டாக கண் – வாய். இருப்பினும் பல அசைகளைக் கொண்ட  சொற்களே மொழியில் அதிகம். எனில் பிள்ளைகளுக்கு ஆரம்பத்தில் அசைகளைச் சேர்த்து சொற்கள் ஆக்கவும் பின் சவாலான சொற்களை வாசிக்க நேரும்போது அசை பிரித்து, சேர்த்து சொல்லாக வாசிக்கவும் கற்றுத் தர வேண்டும் (Encloding and decoding).

சுருள் பிணைப்பு (Binding) கொண்ட அசைப் புத்தகங்கள் மின்வேகத்தில் மாற்றி மாற்றி வெவ்வேறு ஒலிகளை அசைகளாகக் கற்றுத் தரும்.

விளையாட்டுக்களின் வழி அசைகளைக் கற்பது

International Tamil Academyஅசைகளை விளையாட்டின் வழி கற்க 2 விளையாட்டுகள் உள்ளன. இவற்றை விளையாடின உற்சாகத்தில் பிள்ளைகள் போட்டி போட்டுக்கொண்டு எளிதாக – இயற்கையாகக் கற்பர்.

பன்னிரண்டு அசைப் பாடல்களும் அசைகளை இனிமையாக உல்லாச உணர்வோடு கற்றுக் கொடுக்கும். இசை வகுப்பின் இறுக்கத்தைக் குறைப்பதோடு பிள்ளைகளின் உணர்வில் மற்றுமோர் நாளத்தை மீட்டிக் கற்கச் செய்யும்.

ஒன்றாகப் பாடும்போது தம்மோடு பலம் பயணிக்கின்றார்கள் என்ற ஒற்றுமை உணர்வைக் கொடுத்து சிலாகிக்கச் செய்யும். கற்றல் முழுமையாக இடம் பெறுவது தற்காப்பு உணர்வுகள் (defence mechanisms) தளர்த்தி விடப்படும் போதுதானே!

சந்தம் கற்பது அத்தியாவசியம். சந்தம் ஒலியின் தன்மையையும் மென்மையான வேறுபாடுகளையும் (nuances) சொல்லித் தரும். இதற்கென்று தயாரிக்கப்பட்ட “எங்கும் உல்லாசம் எவ்விடத்தும் ஆனந்தம்” கேளிக்கைப் புத்தகம் பிள்ளைகளின் களிப்பு!

மற்றுமோர் விளையாட்டு முழுச் சொற்களை அடையாளம் காணக் கற்றுத் தரும். போட்டியின் காரணமாக முழுச்சொற்களை அடையாளம் காண மாணவர்கள் உந்தப்படுவர்.

கற்ற சொற்களை மாணவர்கள் தானே எழுத்துக் கூட்டி அமைப்பதற்கு ஒரு விளையாட்டு உள்ளது. இந்த விளையாட்டு மாணவர்களை விழிப்பு நிலையில் வைத்திருப்பதோடு போட்டி போட்டுக் கொண்டு இயல்பாகக் கற்கச் செய்யும் (unconscious learning).

மாணவர் பயிற்சிப் புத்தகங்களை மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப படிகள் எடுத்துக் கொள்ளலாம். இந்தப் பயிற்சிகள் பிள்ளைகளின் கவனத்தை ஒருமுகப்படுத்தப்படும் வகையிலும் கவரும் வகையிலும் படைக்கப்பட்டிருக்கின்றன.

-செல்லியல் தொகுப்பு