பெட்டாலிங் ஜெயா – இந்து இளைஞர் இயக்கம் மற்றும் 7 அரசு சாரா சமூக இயக்கங்கள் இணைந்து நேற்று பெட்டாலிங் ஜெயாவில் நடத்திய மகா இந்து இளைஞர் ஒற்றுமை எழுச்சி வேள்வி நிகழ்ச்சியை, இந்தியாவின் புகழ்பெற்ற ஆன்மீகக் குருவான ஸ்ரீ ஸ்ரீ இரவிசங்கர் முன்னிலையில், மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
மேடையில் குருஜி ஸ்ரீ ஸ்ரீ இரவிசங்கருடன் டாக்டர் சுப்ரா – இடது புறத்தில் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் கணபதி ராவ்..
இந்நிகழ்ச்சிக்கு தனது ஆசிர்வாதங்களை வழங்கியிருப்பதோடு நேரடியாகவும் கலந்து கொண்டு தனது நல்லாசிகளை ஸ்ரீ ஸ்ரீ இரவிசங்கர் வழங்கியுள்ளார். மலேசிய வாழ் இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ தன்னுடைய ஆசிர்வாதத்தை வழங்குவதாகவும் ஸ்ரீ ஸ்ரீ இரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சி குறித்துத் தெரிவித்த டாக்டர் சுப்ரா “நமது பாரம்பரியத்தை எடுத்துக்கூறும் வகையில் ஸ்ரீ ஸ்ரீ இரவி சங்கர் அவர்கள் இருந்து வருகிறார். ஏனென்றால், குருஜி அவர்களுக்கு இந்தியாவிலுள்ள இந்துக்கள் மட்டுமல்ல. மாறாக உலகெங்கும் வாழக்கூடிய மற்ற சமுதாயத்தினரும் குருஜி பத்தர்களாக இருக்கின்றனர். இந்து சமயத்தைச் சார்ந்த அறிஞர்கள், பெரியோர்கள், ஞானிகள் அனைவரின் சேவைகளும், கருத்துகளும், சமயத்திற்கு அப்பால் சென்று உலகெங்கும் வாழக்கூடிய எல்லா சமயத்தினருக்கும் போய் சேர வேண்டும் என்பதே இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ஆகும்” என்று கூறியுள்ளார்.
மகா இந்து இளைஞர் ஒற்றுமை எழுச்சி வேள்வி நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து உரையாற்றும் சுப்ரா…
“அதன் அடிப்படையில், குருஜி அவர்களின் வாழ்க்கை முறையும் அப்படித்தான் இருக்கின்றது. நம் சமயமானது மற்ற மற்ற சமயத்தைப் போன்று குறுகிய எல்லைக்குள்தான் வாழ வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லாததால்தான் இந்துக்களுக்கு எப்பொழுதுமே சுதந்திர சிந்தனையும் புரட்சிகரமான கண்ணோட்டங்களும் இயல்பாகவே இருக்கின்றன. அவ்வகையில், 8 இயக்கங்களும், இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு எடுத்திருக்கக்கூடிய முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மலேசிய இந்துக்கள் ஒற்றுமையாக வாழ்வதோடு மட்டுமின்றி ஒற்றுமையாக சிந்திக்க வேண்டும் என்னும் நோக்கிலும், வரக்கூடிய சவால்களையும் ஒருங்கிணைக்கப்பட்ட சிந்தனையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்ற முயற்சியிலும் இந்த ஒற்றுமை எழுச்சி வேள்வி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் பாராட்டத்தக்க ஒரு முயற்சியாகும். எனவே, எல்லோரது சார்பிலும் இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுவினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஓர் ஆரம்பமாகவும் வருங்காலத்தின் தொடர்ச்சியாகவும் இருக்க வேண்டும்” என்றும் சுப்ரா கூறியுள்ளார்.
நிகழ்ச்சியில் உரையாற்றும் குருஜி ஸ்ரீஸ்ரீ இரவிசங்கர்….
“நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய அறிவு, உழைப்பு, நெறி ஆகிய முன்று அம்சங்களும் மிகவும் அவசியமாகின்றது. இவையனைத்தும் நம்மை வாழ்வில் நிச்சயம் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும். அதுவே தருமமும் ஆகும். எனவே, இளைஞர்கள் இதனை மனத்தில் வைத்துக் கொண்டு வாழ்வார்களாயின் நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்கு மேல் வெற்றியடையக்கூடிய வாய்ப்பும் அதிகமாகவே இருக்கும். நாம் அனைவரும் இந்துக்களாகப் பிறப்பதற்கு நிச்சயமாகப் புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஏனென்றால், மற்ற சமயங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது உலகளாவிய தன்மை கொண்ட ஒரே சமயம், இந்து சமயம் எனக் கூறலாம். அந்தச் சமயத்தைச் சார்ந்தவர்களாகிய நாம் இந்துக்களாகவே பிறந்து, இந்துக்களாகவே வாழ்ந்து, இந்துக்களாகவே இறக்க வேண்டும்” என்றும் சுப்ரா குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டாக்டர் சுப்ராவுடன், மக்கள் சக்தி கட்சித் தலைவர் டத்தோ ஆர்.எஸ்.தனேந்திரன், சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் கணபதிராவ், பிரதமர் துறையின் சிறப்பு அதிகாரி டத்தோ என்.எஸ்.இராஜேந்திரன்…