சென்னை – கவிப்பேரரசு வைரமுத்துவின் இலக்கியப் படைப்புகளில் உலகப் புகழ் பெற்ற நாவல் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’. தமிழில் இலட்சக்கணக்கில் விற்பனையாகி சாதனை புரிந்ததோடு, அனைத்துத் தரப்பு வாசகர்களையும் இலக்கிய வட்டங்களையும் ஒருசேர ஈர்த்த படைப்பாக இந்த நாவல் திகழ்கின்றது.
சாகித்திய அகாடமியின் பரிசு பெற்ற இந்த ‘கள்ளிக் காட்டு இதிகாசம்’ நாவல் தற்போது ஆங்கிலம் உட்பட 23 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வருவதாகவும், இதனை சாகித்திய அகாடமியே ஏற்பாடு செய்து வருவதாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை நேற்று தமிழகத்தின் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி அலைவரிசையில் இடம் பெற்ற ஒரு நேர்காணலில் வைரமுத்துவே உறுதிப்படுத்தியுள்ளார். சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த நேர்காணலில், வைரமுத்து இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
23 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படும் கள்ளிக்காட்டு இதிகாசம் அநேகமாக அடுத்த ஆண்டு வெளியாகலாம் என்றும் வைரமுத்து தெரிவித்துள்ளார்.