கோலாலம்பூர் – “நடக்கும் என்பார் நடக்காது, நடக்காது என்பார் நடந்து விடும்” என்பது என்றென்றும் அரசியலுக்குப் பொருந்தக் கூடிய – காலத்தால் அழியாத வாசகங்கள். ஒரு தமிழ்ப் பாடலின் முதல் வரிகளும் கூட!
இரட்டை நாடாளுமன்ற இடைத் தேர்தல்களில் தேசிய முன்னணி வேட்பாளருக்கு எதிராகக் களமிறங்கப் போகும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட், ஜசெக மேடைகளில் ஏறி பிரச்சாரத்தை மேற்கொள்ளப் போகின்றார் என்பதுதான் நடக்கப் போகும் அரசியல் அதிசயம்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் 2013 பொதுத் தேர்தலில் மகாதீர் தேசிய முன்னணிக்கு ஆதரவாக பிரச்சாரத்திற்கு சென்ற தொகுதிகளில் முக்கியமானது ஜோகூர் கேலாங் பாத்தா. இங்கு போட்டியிட்ட ஜசெக தலைவர் லிம் கிட் சியாங்கைத் தோற்கடித்து அவரது அரசியல் வாழ்க்கையை ஒரு முடிவுக்குக் கொண்டு வாருங்கள் என்ற பிரச்சாரத்தோடு அப்போது மேடையேறினார் மகாதீர்.
இன்றோ, நேர் மாறாக, அதே ஜசெக கட்சி இடைத் தேர்தல் நடைபெறும் இரண்டு தொகுதிகளிலும் இந்த வாரக் கடைசியில் ஏற்பாடு செய்துள்ள 1எம்டிபி மற்றும் பிரதமரின் வங்கிக் கணக்குக்கு வந்த கோடிக்கணக்கான ரிங்கிட் குறித்த சிறப்பு கலந்துரையாடல் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றவிருக்கின்றார்.
இங்குதான் மகாதீர் வித்தியாசப்படுகின்றார்!
அவரது போராட்டத்தின் இலக்கு நஜிப்பின் பதவி விலகலும் – 1 எம்டிபி விவகாரமும்தான்! எனவே ஜசெகவின் அரசியல் மேடையில் ஏறி, தேசிய முன்னணிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யாமல், 1எம்டிபி விவகாரம் குறித்த எதிர்மறை பிரச்சாரத்தை மேற்கொள்கின்றார் மகாதீர் – தனக்குத் தானே ஒரு மெல்லிய கோடு வகுத்துக் கொண்டு!
1எம்டிபி மற்றும் பிரதமர் பெற்ற நன்கொடை விவகாரம் தொடர்பில் ஜசெக ஏற்பாடு செய்துள்ள சிறப்பு கலந்துரையாடல் கூட்டத்தில் மகாதீர் கலந்து கொள்வதை ஜசெக பிரச்சாரப் பகுதி செயலாளர் டோனி புவா உறுதிப்படுத்தியுள்ளார். சுங்கை பெசார், கோலகங்சார் இரண்டு தொகுதிகளிலும் நடைபெறும் கூட்டங்களிலும், முக்கியத் தலைமைப் பேச்சாளராக மகாதீர் இடம் பெறுகின்றார் என்றும் அவர் கூறியுள்ளார். இன்று வரையில் மகாதீர் இரட்டை நாடாளுமன்றத் தொகுதிகளின் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை.
இந்த இரண்டு கூட்டங்களிலும் நிறைவுரையை லிம் கிட் சியாங் வழங்குவார்.
ஜூலை 11ஆம் தேதி சனிக்கிழமை சுங்கை பெசார் ஹாவ் சியாங் சி உணவக மண்டபத்தில் காலை 9.30 முதல் பிற்பகல் 2.00 மணி வரை முதல் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறுகின்றது.
ஜூலை 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோலகங்சார் சூன் ஜி உணவக மண்டபத்தில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணிவரை இரண்டாவது கலந்துரையாடல் கூட்டம் நடைபெறுகின்றது.
மற்ற பல தலைவர்களும் கலந்து கொண்டு இந்தக் கலந்துரையாடல் கூட்டங்களில் உரையாற்றுவார்கள்.
கோலகங்சார் கூட்டத்தில் அம்பிகா சீனிவாசனும் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.