புதுடெல்லி – வரும் ஜூன் 14-ம் தேதி டெல்லி செல்லும் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியிடம் பல முக்கிய விவகாரங்கள் குறித்து கலந்தாலோசிக்கவுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் ஒழுங்குமுறை குழு அமைப்பது தொடர்பாகவும், தமிழக மீனவர் பிரச்னை, கச்சத்தீவு மீட்பு விவகாரம் குறித்தும் பிரதமருடன் ஜெயலலிதா ஆலோசிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கு கூடுதல் நிதி பெறுவது, அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் பெறுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் பிரதமரிடம் ஜெயலலிதா முன்வைப்பார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழகம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற் காக, முதல்வர் ஜெயலலிதாவை பிரதமர் அழைத்துள்ளார். அவரது அழைப்பை ஏற்று முதல்வர் ஜெயலலிதா வரும் 14-ம் தேதி காலை டெல்லி செல்கிறார். அன்றே மீண்டும் சென்னை திரும்புகிறார்” என்று கூறப்பட்டுள்ளது.