சென்னை – கபாலி படத்தின் பாடல்கள் நாளை ஜூன் 12ஆம் தேதி கடைகளிலும், இணையத் தளங்களிலும் நேரடியாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், அந்தப் படத்தின் பாடல்களைப் பாடியிருப்பவர்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதில் இரசிகர்களுக்கு ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அளிக்கும் விதத்தில் “நெருப்புடா” என்று தொடங்கும் பாடலில் சில வசனங்களை ரஜினிகாந்த் பேசியுள்ளார் என கபாலி படத்துக்கான பாடல் பாடியோர் பட்டியல் தெரிவிக்கின்றது.
இந்தப் பாடலின் சில வரிகள் படத்தின் முன்னோட்டத்திலும் இடம் பெற்றன. உடனடியாக பிரபலமும் அடைந்துவிட்டன அந்த வரிகள். முன்னோட்டத்தில் இடம் பெற்ற பாடலின் வரிகளைக் கொண்டு கைத்தொலைபேசிகளின் ஒலி இசைகளும் (ringtone) உருவாக்கப்பட்டு ரஜினி இரசிகர்களால் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ரஜினியின் ‘பஞ்ச்’ வசனங்கள் – அதிரடி வரிகளைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. வழக்கமாக படம் முடிந்தவுடன்தான் ரஜினியின் வசனங்கள் பற்றிக் கொள்ளும். ஆனால், கபாலி படத்தின் பஞ்ச் வார்த்தைகள் இப்போதே பற்றிக் கொண்டுவிட்டன.
சாதாரணமாக, அனைவராலும் சொல்லப்படும் ‘மகிழ்ச்சி’ என்ற வார்த்தை, ரஜினியின் வாயில் இருந்து படத்தின் முன்னோட்டத்தில் உதிர்ந்து, அது ஏதோ இப்போது புதிதாக ரஜினியே கண்டுபிடித்த வார்த்தை போன்று பரிமாறப்படுகின்றது.
அதுபோலவேதான், ‘நெருப்புடா’ – ‘கபாலிடா’ – போன்ற வார்த்தைகளும்!
இதைத்தான் ரஜினி மேஜிக் என்கிறார்களோ?