கோலாலம்பூர் – தியோமான் தீவில் 17 வயது பெண் ஒருவர், அரசு அதிகாரி உட்பட 6 பேரால் தொடர்ந்து பல நாட்கள் கற்பழிக்கப்பட்ட செய்தி நாடெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரி காவல்துறையில் சரணடைந்துள்ளார்.
தனது மூத்த அதிகாரி காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் படி கூறினார் என்று கூறி 26 வயதான அந்த அரசு அதிகாரி காவல்துறையிடம் சரணடைந்துள்ளதாக ரொம்பின் ஓசிபிடி துணை கண்காணிப்பாளர் முகமட் ஐடில் ரோனே அப்துல்லா தெரிவித்துள்ளார்.
கம்போங் தேகெக் ஜெட்டியில் பகுதி நேரப் பணியாளராக வேலை செய்து கொண்டிருந்த அந்த நான்காம் படிவம் மாணவி, தனக்கு அங்கிருந்த சுங்க அதிகாரியும், பாதுகாவலர்களும் போதை மருந்து கொடுத்து கற்பழித்து வந்ததாக அண்மையில் காவல்துறையில் புகார் அளித்தார்.
இந்தச் சம்பவம் கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் அத்தீவில் நடந்துள்ளது.
கற்பழிக்கப்பட்டது குறித்து காவல்துறையில் தெரிவித்தால், தன்னையும், தனது தந்தையையும் சிறையில் தள்ளிவிடுவதாக அந்த அதிகாரிகள் மிரட்டியதாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது அண்டை வீட்டுப் பெண்ணும் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும், அவரது சகோதரரும் தன்னைக் கற்பழித்து நிர்வாணமாகப் படங்கள் மற்றும் காணொளிகளை எடுத்ததாகவும் அம்மாணவி தெரிவித்துள்ளார்.
அம்மாணவிக்கு நடந்த இக்கொடுமைகளை அறிந்த ஆசிரியர், கடந்த மே 19-ம் தேதி, மாணவியின் தந்தையிடம் தெரிவித்ததை அடுத்து இவ்விசயம் காவல்துறைக்குச் சென்றுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் அரசாங்க அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருந்தாலும், அவர்கள் தவறு செய்திருப்பது நிரூபிக்கப்பட்டால் எந்த ஒரு மூடி மறைப்பும் இன்றி தண்டனை வழங்கப்படும் என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி உறுதியளித்துள்ளார்.