சென்னை – நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இன்று செவ்வாய்க்கிழமை புதுடில்லிக்கு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கச் செல்கிறார் ஜெயலலிதா. அதன் தொடர்பில் சில பின்னணித் தகவல்கள்:
கடந்த முறை ஜெயலலிதா, மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்தபோது….
தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஜெயலலிதாவுக்கும், மோடிக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும்.
- இன்று காலை விமானம் மூலம் புதுடில்லி செல்லும் ஜெயலலிதா இன்று இரவே சென்னை திரும்புகின்றார். அண்மைய சட்டமன்றப் பிரச்சாரங்களில் கூட எங்கும் அவர் இரவு தங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல, புதுடில்லியிலிருந்தும் இன்றிரவே அவர் சென்னை திரும்புகின்றார்.
- இன்று மாலை 4.30 மணியளவில் ஜெயலலிதா மோடியைச் சந்திக்கின்றார். அவருக்கு சுமார் 50 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
- மோடியைச் சந்திப்பதற்கு முன்பாக சில அமைச்சர்களை அவர் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
- மோடியுடனான சந்திப்பில், பாஜக-அதிமுக இடையிலான அரசியல் உறவு, குறிப்பாக மாநிலங்களவையில் அவர்களுக்கிடையிலான செயல்பாடுகள் முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் புதிய இந்திய அதிபருக்கான தேர்தல், பாஜக சமர்ப்பிக்கவிருக்கும் ஜிஎஸ்டி எனப்படும் பொருள்சேவை வரி மீதான மசோதா, மேலும் சில மசோதாக்கள் ஆகியவை குறித்த அதிமுக நிலைப்பாடு, மோடி – ஜெயலலிதா பேச்சுவார்த்தையில் முக்கிய அங்கமாக இடம் பெறும்.
- இலங்கைத் தமிழர் பிரச்சனை, தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவது, கச்சத் தீவு மீட்பு ஆகியவையும் இன்றைய சந்திப்பில் முக்கியமாக இடம் பெறும்.
- ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் 25 ஆண்டுகளாக வாடும் 7 பேரை விடுதலை செய்யும், தமிழக அரசின் முயற்சி குறித்தும் இன்றைய பேச்சுவார்த்தையில் இரு தரப்புகளுக்கும் உடன்பாடு ஏற்படக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது. சில நாட்களுக்கு முன்னால் (ஞாயிற்றுக்கிழமை) சிறையில் வாடும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தலைமையில் சென்னை கோட்டையை நோக்கி நடத்தப்பட்ட பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டது, இந்த விவகாரம் குறித்த ஓர் அழுத்தத்தைத் தந்துள்ளது.
- தமிழக அரசு மேற்கொள்ளவிருக்கும் மோனோ இரயில் திட்டம், ஏய்ம்ஸ் பல்கலைக் கழகம் மதுரையில் அமைப்பது, போன்ற பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள், அதற்கான மத்திய அரசு நிதி ஒதுக்கீடு ஆகியவையும் இன்றைய சந்திப்பில் தலையாய அம்சங்களாக விவாதிக்கப்படும்.