மணிலா – அபு சயாப் இயக்கத்தினரால் கடத்தி வைக்கப்பட்டிருந்த கனடாவைச் சேர்ந்த ராபர்ட் ஹால், தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதை பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கேட்ட பிணைத்தொகையைக் கொடுக்கவில்லை என்ற காரணத்தினால், கொலை செய்யப்பட்டிருக்கும் இரண்டாவது கனடா நாட்டவர் இவராவார்.
கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், கனடாவைச் சேர்ந்த ராபர்ட் ஹால், அவரது பெண் தோழி பிலிப்பினா மாரிடெஸ் பிளார், நார்வே நாட்டைச் சேர்ந்தவரான ரிசார்ட் மேலாளர் ஜார்டான் செக்கிங்ஸ்டட், மற்றொரு கனடா நாட்டவர் ஜான் ரிட்செல் ஆகியோர் ஜோலோவிலிருந்து 500 கிலோமீட்டருக்கும் மேற்பட்ட தொலைவில் அமைந்துள்ள டாவோ என்ற நகரத்திற்கு அருகே பிலிப்பைன்சின் அபு சயாப் தீவிரவாத அமைப்பினரால் கடத்தப்பட்டனர்.
அவர்களை விடுவிக்க தொடர்ந்து பிணைத் தொகை கேட்டு வந்த அபு சயாப் இயக்கத்தினரின் முயற்சிகள் தோல்வியில் முடியவே, கடந்த ஏப்ரல் மாதம் ஜான் ரிட்செலின் தலையைத் துண்டித்து கொலை செய்தனர்.
இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை, ராபர்ட் ஹாலின் தலையையும் துண்டித்துக் கொலை செய்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் காவல்துறைக்கு நேற்று கிடைத்த காணொளி ஒன்றில், கொலை செய்யப்படுவதற்கு முன்பாக காட்டில் ஆரஞ்சு நிற உடையில், ராபர்ட் ஹால் மண்டியிட்டு அமர வைக்கப்பட்டுள்ள காட்சிகள் பதிவாகியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
ராபர்ட் ஹாலின் மரணத்தை அறிந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியூ, தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
“கனடா அரசு தீவிரவாத அமைப்பினருக்கு பிணைத் தொகை கொடுக்காது, கொடுக்கவும் முடியாது. இதைக் கடைபிடிப்பதால், கனடா நாட்டவர்கள் பலரின் வாழ்வுக்கு அச்சுறுத்தல் இருந்து வருகின்றது” என்று ஜஸ்டின் ட்ரூடியூ தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.