புதுடெல்லி – பஞ்சாப் மாநிலத்தில் இளைஞர்களை அடிமையாக்கி வரும் போதைப் பழகத்தை அடிப்படையாகக் கொண்ட படமான ‘உட்தா பஞ்சாப்’ திரைப்படத்திற்கு, இந்தியாவின் மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CPFC) விதித்த கட்டுப்பாடுகளையெல்லாம் அதிரடியாக நீக்கி தீர்ப்பளித்துள்ளது மும்பை உயர் நீதிமன்றம்.
படத்தில் ஆபாசம், வன்முறைக் காட்சிகள் இருப்பதாகக் கூறி 89 இடங்களில் காட்சிகளை வெட்ட சிபிஎஃசி உத்தரவிட்ட பரிந்துரையை நிராகரித்த மும்பை நீதிமன்றம், ஒரே ஒரு காட்சி நீக்கம் மற்றும் திருத்தி அமைக்கப்பட்ட வாசகங்களுடன் படத்தை வெளியிட படக்குழுவினருக்கு அனுமதி அளித்துள்ளது.
அதன் படி படத்தில் ஷாகித் கபூர் கூட்டத்தினர் மத்தியில் சிறுநீர் கழிக்கும் காட்சியையும், பாகிஸ்தான் தொடர்பான வாசகங்களையும் நீக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.சி. தர்மாதிகாரி, ஷாலினி பன்சால்கர் ஜோஷி ஆகியோரடங்கிய அமர்வு நேற்று இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.
வரும் 17-ம் தேதிக்குள் படத்தை வெளியிடுவதற்கு வசதியாக அடுத்த 48 மணி நேரத்துக்குள் சான்றிதழ் அளிக்கும்படியும் தணிக்கை வாரியத்துக்கு நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.
‘உட்தா பஞ்சாப்’ படத்தை அபிஷேக் சவுபே இயக்கியுள்ளார். இதில், ஷாகித் கபூர், கரீனா கபூர், அலியா பட், தில்ஜித் தோசஞ் உள்ளிட்டோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.