Home Featured நாடு இந்துக்கள் பற்றிய யுடிஎம் பாடக் குறிப்புகள் அறியாமைக்கு ஓர் உதாரணம் – டாக்டர் சுப்ரா கருத்து!

இந்துக்கள் பற்றிய யுடிஎம் பாடக் குறிப்புகள் அறியாமைக்கு ஓர் உதாரணம் – டாக்டர் சுப்ரா கருத்து!

660
0
SHARE
Ad

Dr Subra - MIC PRESIDENTகோலாலம்பூர் –  மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (யுடிஎம்) மாணவர்களுக்கு போதிக்கப்படும் பாடத்திட்டத்தில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் குறித்த தவறான கருத்துகள் இடம்பெற்றிருப்பது, பல்கலைக்கழகங்கள் உட்பட நாடெங்கிலும் அறியாமை  இரண்டரக் கலந்திருப்பதற்கு ஒரு உதாரணம் என மஇகா தேசியத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

“அறிவைப் புகட்ட வேண்டிய இடத்திலேயே அறியாமை குளம் போலத் தேங்கிக் கிடக்கின்றது. இதற்கு முன்பு இதனைப் பள்ளிகளில் பார்த்திருக்கிறோம். தற்போது அது பல்கலைக்கழகங்களிலும் இருப்பதை உணர்கின்றோம்” என்று டாக்டர் சுப்ரா இன்று வெளியிட்ட செய்தியறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமுக்கு முன்பே இந்து சமயத்தில் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து குளித்து, பிரார்த்தனைகள் செய்த பின்னர் அன்றைய நாளைத் துவங்க வேண்டும் என்று உள்ளதைச் சுட்டிக் காட்டிய சுப்ரா, யுடிஎம் பாடத்திட்டத்தில் கூறப்பட்டக் கருத்துகள் இதற்கு முற்றிலும் நேர்மாறாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“எப்போது நாம் அறிவாந்த நேர்மையைப் பெறப் போகிறோம்?”

“வரலாறு மற்றும் நிரூபிக்கப்பட்ட உண்மைகளைக் கொண்டுவர முதலில் கல்வி முறையில் இடம்பெற்றுள்ளவர்கள்  உண்மையான விருப்பத்துடன் செயலாற்ற வேண்டும். மற்ற மதங்களையும், கலாச்சாரத்தையும் ஒப்பிட நினைக்கும் முயற்சி எப்போதுமே ஆபத்து தான்” என்றும் டாக்டர் சுப்ரா தெரிவித்துள்ளார்.

மேலும், அது போன்ற தவறான திரிப்புகள் ஏற்படுவது ஏன் என்பதைக் கண்டறிய உளமார்ந்த தேடல் தேவைப்படுகின்றது என்பதையும் டாக்டர் சுப்ரா குறிப்பிட்டுள்ளார்.

ஒருநாள் இது போன்ற விவகாரங்களெல்லாம் கடந்த காலமாக மாறும், அப்படி ஒரு விடியலுக்காக தான் பிரார்த்தனை செய்து கொள்வதாகவும் சுப்ரா தெரிவித்துள்ளார்.

இந்துக்கள் அழுக்காகவே இருக்க விரும்புகின்றனர் என்றும், இஸ்லாம் அவர்களுக்கு வாழ்க்கை முறையைப் போதிக்கின்றது என்றும் தவறான தகவலுடன் யுடிஎம்-ன் சின்னம் கொண்ட அறிக்கை ஒன்று அண்மையில் இணையத்தில் பரவியதால் சர்ச்சை எழுந்தது.

மேலும், அதில் சீக்கிய மதம் என்பது இந்து மற்றும் இஸ்லாமை அடிப்படையாகக் கொண்டது என்றும், அதனை தோற்றுவித்தவர்கள் இஸ்லாம் மீது தான் ஆழமான நம்பிக்கைகள் கொண்டிருந்ததாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், தவறான குறிப்புகளைக் கொண்டிருந்த பாடத் திட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வர மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஒப்புக் கொண்டுள்ளதாக துணைக் கல்வியமைச்சர் பி.கமலநாதன் நேற்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.