புதுடெல்லி – டெல்லியில் தனது தலைமையிலான அரசாங்கத்தை, மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படவிடாமல் தடுப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 21 பேர், சட்டப்பேரவைச் செயலர்களாக நியமிக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து, இந்த 21 எம்.எல்.ஏ.க்களும் இரட்டைப் பதவி வகிப்பதாகவும், அவர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரியும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் புகார்கள் அளிக்கப்பட்டன.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார்.
இதனிடையே, 21 எம்.எல்.ஏ.க்களும் தகுதி நீக்கம் செய்யப்படாமல் பாதுகாக்க, டெல்லி பேரவை உறுப்பினர்கள் சட்டம்-1997-ல் திருத்தம் மேற்கொள்ளும் மசோதாவை, ஆம் ஆத்மி அரசு நிறைவேற்றியது. மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட இம்மசோதா, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
இந்த விவகாரத்தில், டெல்லி அரசு நிறைவேற்றிய சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறுத்துவிட்டதாக குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மோடியை கடுமையாக விமர்சித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதில், “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ஜனநாயகத்தை மதிக்காமல் செயல்படுகிறது. யாரும் செயல்படக்கூடாது, அல்லது வேறு யாரையும் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது என்ற கொள்கையை பிரதமர் பின்பற்றுகிறார்” என்று அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.