புதுடெல்லி – உலகின் மிகக் குறைந்த விலை அண்டிரோய்டு திறன்பேசிகளை அறிமுகம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய இந்தியாவின் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம், 251 ரூபாய் மதிப்புள்ள ‘பிரீடம் 251’ திறன்பேசிகளை வரும் ஜூன் 28-ம் தேதி முதல் விநியோகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இத்திறன்பேசியை வாங்க இதுவரை 7 கோடி பேர் முன்பதிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
வரும் ஜூன் 28-ம் முதல், பொருளைப் பெற்றதும் ரொக்கம் (cash on delivery) முறையில் பதிவு செய்துள்ள 25 லட்சம் பேருக்கு முதற்கட்டமாக இத்திறன்பேசிகள் விநியோகம் செய்யப்படவுள்ளதாக ரிங்கிங் பெல்ஸ் நிர்வாக இயக்குநர் மொயித் கோயல் அறிவித்துள்ளார்.
இதனிடையே, 2,400 ரூபாய் மதிப்பிலான அண்டிரோய்டு திறன்பேசியை 251 ரூபாய்க்கு விற்பனை செய்வதாகக் கூறி முறைகேடு செய்வதாக ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பான, வழக்கு நடைபெற்று வரும் நிலையில், திட்டமிட்டபடி, ஜூன் மாதம் முதல்கட்ட விற்பனை தொடங்கும் என ரிங்கிங் பெல்ஸ் நிறுவன இயக்குநர் மொயித் கோயல் தெரிவித்துள்ளார்.