Home Featured இந்தியா தேடப்படும் குற்றவாளி விஜய் மல்லையா – மும்பை நீதிமன்றம் அறிவிப்பு!

தேடப்படும் குற்றவாளி விஜய் மல்லையா – மும்பை நீதிமன்றம் அறிவிப்பு!

954
0
SHARE
Ad

vijay-mallayaபுதுடெல்லி – வங்கிக் கடன்ககளை திருப்பிச் செலுத்தாமல், இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று லண்டனில் பதுங்கியிருக்கும் தொழிலதிபர் விஜய் மல்லையாவை, தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது மும்பை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச்சட்ட சிறப்பு நீதிமன்றம்.

கிட்டத்தட்ட 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் இந்திய வங்கிகளில் கடன் பெற்ற விஜய் மல்லையா, அதனைத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றார்.

இந்நிலையில், அவர் மீதான சில வழக்குகளில் நீதிமன்றங்கள் கைது ஆணைகளைப் பிறப்பித்துள்ளன.

#TamilSchoolmychoice

ஐடிபிஐ வங்கியிடம் இருந்து பெற்ற 900 கோடி ரூபாய் கடன் தொடர்பான வழக்கில், நேரில் ஆஜராகாத விஜய் மல்லையாவிற்கு, பிணையில் வெளிவர முடியாத உத்தரவை வழங்கியது மும்பை நீதிமன்றம்.

இந்நிலையில், லண்டனில் பதுங்கியுள்ள விஜய் மல்லையாவை இந்தியாவிற்குத் திருப்பி அனுப்புமாறு இந்திய அரசாங்கம் கோரிக்கை விடுத்தும் இங்கிலாந்து அதனை நிராகரித்து வருகின்றது.

தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தால் தங்களால் நாடு கடத்த முடியும் என்று இங்கிலாந்து கூறியதை அடுத்து, மும்பையில் உள்ள சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச்சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 82வது பிரிவின் கீழ் அமலாக்கத் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், காசோலை மோசடி உள்பட பல்வேறு வழக்குகளில் விஜய் மல்லையாவுக்கு எதிராகக் கைது உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன என்றும், சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கிலும் அவர் தேடப்படுகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அம்மனு நேற்று மும்பை பிஎம்எல்ஏ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அம்மனுவை விசாரணை செய்த நீதிபதி பி.ஆர்.பாவ்கே, “அமலாக்கத் துறையின் மனுவை ஏற்று விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவிக்கின்றது” என்று தீர்ப்பளித்தார்.

இந்த உத்தரவை அடுத்து, விஜய் மல்லையாவை எங்கு வேண்டுமானாலும் கைது செய்ய காவல்துறைக்கு அதிகாரம் கிடைத்துள்ளது.

அதேவேளையில், லண்டனில் இருக்கும் விஜய் மல்லையாவை நாடு கடத்துவதற்கும் இந்த உத்தரவு உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது.