புதுடெல்லி – இந்தியாவில் உள்ள அனைத்துத் தரப்பு மக்கள் கைகளிலும் திறன்பேசி புழக்கத்தில் வர வேண்டும் என்ற நோக்கில், 251 இந்திய ரூபாய் மதிப்பில் மிகக் குறைந்த விலையில் ப்ரீடம் 251 திறன்பேசியை (Smart Phone) அறிமுகப்படுத்தியுள்ளது ரிங்கிங் பெல் என்ற நிறுவனம்.
500 ரூபாய்-க்குள் அதன் விலை நிர்ணயம் செய்யப்படும் என்று அறிவித்திருந்தது அந்நிறுவனம். ஆனால் நேற்று நடைபெற்ற அறிமுக விழாவில் இத்திறன்பேசியின் விலை 251 ரூபாய் மட்டுமே என்பதை உறுதிப்படுத்தியுள்ளது ரிங்கிங் பெல்.
இன்று பிப்ரவரி 18-ம் தேதி காலை 6 மணி தொடங்கி 21-ம் தேதி 8 மணி வரை இத்திறன்பேசியை வாங்க முன்பதிவுகள் தொடங்கியுள்ளன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின், “கடைசிக் குடிமகன் வரையில் இந்தியாவை வளர்ச்சியடையச் செய்வது, உருமாறும் இந்தியாவின் வளர்ச்சி கதை” என்ற நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திறன்பேசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக நொய்டாவைச் சேர்ந்த ரிங்கிங் பெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேற்று டெல்லியில் இந்தத் திறன்பேசியை அறிமுகம் செய்து வைத்தார்.