மலாக்கா – நாடு முழுவதும் உள்ள பல்வேறு தங்குவிடுதிகளில் பாலியல் சேவை அளித்ததாக சந்தேகத்தின் பேரில் 33 வயதான பெண் ஒருவர் மலாக்கா ராயா தங்குவிடுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
சமூக வலைத்தளங்களில் மிஸ் நோரா என்ற சங்கேதப் பெயரில் செயல்பட்டு வந்த அப்பெண்மணி நட்சத்திர தங்குவிடுதிகளில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாகவும், இதற்காக அவரை ஒப்பந்தம் செய்யும் வாடிக்கையாளர்களிடம் வைப்புத்தொகை பெற்றதாகவும், மலாக்கா இஸ்லாமிய மதத்துறையின் (JAIM) அமலாக்கத் தலைவர் ரஹிமின் பாணி தெரிவித்துள்ளார்.
பினாங்கைச் சேர்ந்த திருமணமான அந்தப் பெண்ணை ஜாயிம் அமலாக்க குழு, தங்குவிடுதியில் உள்ள ஓர் அறையில் வைத்து இரவு 10.55 மணியளவில் கைது செய்ததாகக் குறிப்பிட்ட அவர், தங்களுக்குக் கிடைத்த புகாரின் பேரில் அந்த தங்குவிடுதியில் சோதனை நடவடிக்கை மேற்கொண்டதாகக் கூறினார்.
“தங்குவிடுதியில் உள்ள அறையில் சோதனையிட்டபோது, அங்கு 14 ஆணுறைகள் காணப்பட்டன. அவற்றுள் ஒன்று பயன்படுத்தப்பட்ட நிலையில் இருந்தது. ரொக்கமாக 6 ஆயிரம் ரிங்கிட் இருந்தது. அது விபசார நடவடிக்கைகளுக்காக செலுத்தப்பட்ட கட்டணமாக இருக்கும் எனக் கருதுகிறோம். மேலும் இரு கைபேசிகள், ஒரு மடிக்கணினி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன” என்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் ரஹிமின் பாணி கூறினார்.
ஒவ்வொரு மாநிலத்திலும் தாம் வழங்கக்கூடிய பாலியல் சேவை குறித்த விவரங்கள் அடங்கிய அட்டவணை ஒன்றை அப்பெண்மணி வைத்திருந்ததாகவும், நாடு முழுவதும் அவர் பேருந்துகளில் தனித்து பயணம் மேற்கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.