Home Featured நாடு இந்தியக் கலாச்சார மையத்தில் நேதாஜியின் திருவுருவச் சிலை திறப்பு விழா

இந்தியக் கலாச்சார மையத்தில் நேதாஜியின் திருவுருவச் சிலை திறப்பு விழா

945
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இந்தியாவின் சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜி  சுபாஷ் சந்திரபோசின் வெண்கலத்தால் ஆன மார்பளவு உருவச் சிலை இந்தியத் தூதரகத்தின் கீழ் இயங்கி வரும், இந்தியக் கலாச்சார மையத்தில் நிர்மாணிக்கப்படவிருக்கின்றது.

கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் எண்: 150, ஜாலான் சுல்தான் அப்துல் சமாட் என்ற முகவரியிலுள்ள மெனாரா சென்ட்ரல் விஸ்தா கட்டிடத்தின் 17வது மாடியில் இயங்கி வரும் இந்தக் கலாச்சார மையம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியக் கலாச்சார மையம் என்ற பெயரில் இயங்கி வருகின்றது.

இங்கு நாளை சனிக்கிழமை (18 ஜூன்) காலை 11.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறும் ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் இந்த சிலை திறப்புவிழா நடைபெறுகின்றது.

#TamilSchoolmychoice

Netaji-bust-ind-high-comஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பரில் மலேசியா வந்திருந்தபோது, நேதாஜியின் பங்களிப்பின் நினைவாக மலேசியாவில் இயங்கும் இந்தியக் கலாச்சார மையம் இனி அவரது பெயரால் அழைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

1940ஆம் ஆண்டுகளில் இந்திய தேசிய இராணுவத்தைத் தோற்றுவித்த நேதாஜி அப்போது மலேசியாவுக்கு வருகை தந்து, நாடு முழுவதும் மலேசியர்களுக்கு, குறிப்பாக இந்தியர்களுக்கு சுதந்திர வேட்கையையும், விழிப்புணர்வையும், உணர்ச்சியையும் தூண்டியவர் என்பதோடு, அவரது தலைமைத்துவ ஆற்றலால் பல இந்தியர்கள் இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து போராட முன்வந்தனர்.

அவர் விதைத்து, விட்டுச் சென்ற அவரது, தியாகம், போராட்டம், தன்முனைப்பு, துணிவு, தலைமைத்துவம் என பலதரப்பட்ட கூறுகளையும் நினைவு கூரும் வண்ணம் இந்த சிலை நிர்மாணிக்கப்படுகின்றது. இந்தியாவுக்கு வெளியே அதிகமான இந்திய வம்சாவளியினர் வாழும் நாடு என்ற முறையில் நேதாஜியின் சிலை இங்கு நிறுவப்படுவதும் கூடுதல் சிறப்பு பெறுகின்றது.

முன்னாள் இந்திய தேசிய இராணுவ வீரர்களே சிலையைத் திறந்து வைப்பர்

சனிக்கிழமை நடைபெறும் சிலை திறப்பு விழாவின் முக்கிய அம்சம், மலேசியாவைச் சேர்ந்த முன்னாள் இந்திய தேசிய இராணுவ வீரர்களின் கரங்களாலேயே இந்தச் சிலை திறந்து வைக்கப்படுவதாகும்.

மலேசியாவில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் சுமார் 35க்கும் மேற்பட்ட முன்னாள் இந்திய தேசிய இராணுவ வீரர்கள் நாளைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Janaki Athinahappan 440 x 215ஜானகி ஆதி நாகப்பன் தனது கணவருடன்- இளவயதுத் தோற்றம்…

இந்திய தேசிய இராணுவத்தின் குறிப்பிடத்தக்க முன்னாள் தலைவர்களில் ஒருவரான புவான்ஸ்ரீ கேப்டன் ஜானகி ஆதி நாகப்பன் கடந்த ஆண்டு மறைந்தார் என்பதும், அவர் நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தின்  ஜான்சி ராணி படையில் கேப்டன் இலட்சுமி சைகால் தலைமையில் துணைத் தலைவராகப் பணியாற்றினார் என்பதும் இங்கு நினைவு கூரத்தக்கதாகும். அவருக்கு 2000ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்தது.

இந்தியக் கலாச்சார மையம்

2010 பிப்ரவரியில் தொடக்கப்பட்ட இந்தியக் கலாச்சார மையம், இந்திய-மலேசிய நல்லுறவுகளை வளர்ப்பதிலும், இரு நாடுகளுக்கு இடையிலான கலாச்சார, பண்பாட்டுக் கூறுகளை விரிவாக்குவதிலும் பல முனைகளிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது.

பழமைவாய்ந்த, வளமையான இந்தியக் கலாச்சாரக் கூறுகளை மலேசிய இந்தியர்களுக்கு எடுத்துக் காட்டும் களஞ்சியமாகவும், மலேசிய இந்தியர்கள் இந்திய இசை, யோகா, போன்ற அம்சங்களை கற்றுக் கொள்ளும் மையமாகவும் இந்தியக் கலாச்சார மையம் திகழ்ந்து வருகின்றது.

நாளை இந்த மையத்தில் நடைபெறவிருக்கும் நேதாஜி சிலை திறப்பு விழாவில் கலந்து சிறப்பிக்க அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றார்கள்.

மேல்விவரங்களுக்கு:

இணைய அஞ்சல் முகவரி: indianculturalcentre.kl@gmail.com

அல்லது frontdesk.icc@indianhighcommission.com.my

தொலைபேசி வழி தொடர்புக்கு: 03-22763492.